Virat Kohli: 500வது சர்வதேச போட்டியில் முதல் வீரராக தனித்துவமான சாதனை புரிந்த கோலி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கோலியின் 500வது சர்வதேச போட்டியாக அமைந்திருக்கும் நிலையில், இதுவரை யாரும் நிகழ்த்திடாத தனித்துவமான சாதனையை புரிந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷினாக இருந்து வரும் விராட் கோலி, டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் அசைக்க முடியாத பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக போர் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கோலி விளையாடும் 500வது சர்வதேச போட்டியாக அமைந்துள்ளது.
இதையடுத்து இந்த போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது. இதில் விராட் கோலி அரைசதம் அடித்து 87 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் ரவீந்திர ஜடேஜா 36 ரன்கள் எடுத்து பேட் செய்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் கோலி - ஜடேஜா பார்ட்னர்ஷிப் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே முதல் நாள் போட்டியில் அரைசதம் அடித்த கோலி தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது தனது 500வது சர்வதேச போட்டியில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி. இந்திய அணியை பொறுத்தவரை சச்சின் டென்டுல்கர், ராகுல் டிராவிட், எம்எஸ் தோனி ஆகியோர் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்த மூன்று ஜாம்பவான்களில் எவரும் தங்களது 500வது போட்டியில் அரைசதம் அடிக்கவில்லை.
ஆனால் கோலி தற்போது அரைசதத்தை பூர்த்தி செய்து விளையாடி வருவது தனித்துவமான சாதனையாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் கோலி ஏற்கனவே ஒரு சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்ததில் தென் ஆப்பரிக்கா முன்னாள் ஆல்ரவுண்டர் ஜேக் காலிஸை முந்தினார் கோலி.
ஜேக் காலிஸ் 519 போட்டிகளில் பங்கேற்று 62 சதங்கள், 149 அரைசதங்கள் உள்பட 25,534 சர்வதேச ரன்கள் எடுத்துள்ளார். இவரது ஸ்கோரை தனது 500வது போட்டியிலியே முந்தியுள்ளார் கோலி. தற்போது 559 இன்னிங்ஸில் 75 சதங்கள், 132 அரை சதங்கள் என 25,548 எடுத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது 87 ரன்கள் எடுத்திருக்கும் கோலிக்கு சதமடிக்க இன்னும் 13 ரன்களே தேவை. இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் அவர் சதமடிக்கும் பட்சத்தில் 76வது சர்வதேச சதமாகவும், 500வது போட்டியில் சதமடித்த வீரர் என்ற புதுமையான சாதனையும் படைக்க வாய்ப்புள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்