UAE vs WI 1st ODI: முதல் சதம் பதிவு செய்த WI வீரர்-தோல்வியுடன் தொடங்கியது ஐக்கிய அரபு அமீரகம்
Brandon King: கீசி கார்டி, கேப்டன் ஷாய் ஹோப் ஆகியோர் கடைசி வரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடி வருகிறது.
நேற்று ஷார்ஜாவில் நடந்த முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது டாஸ் ஜெயித்த ஐக்கிய அரபு அமீரகம் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி, 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களில் சுருண்டது.
அலி நஸீர் அரை சதம் விளாசினார். அரவிந்த் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் முகமது வசீம் டக் அவுட்டானார்.
எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இவ்வாறாக அந்த அணி 202 ரன்களில் ஆட்டமிழந்தது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக கீமோ பால் 7.1 ஓவர்கள் வீசி 34 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார்.
டொமினிக் டிராக்ஸ், ஒடியன் ஸ்மித், கரியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர், 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது.
தொடக்க வீரராக களமிறங்கிய பிராண்டன் கிங் நின்று நிதானமாக விளையாடினார். இளம் வீரரான பிராண்டன் கிங், ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இவர், 112 பந்துகளில் 112 ரன்களை விளாசி, முஸ்தாபா பந்துவீச்சில் ஆர்யன்ஷ் சர்மாவிடம் கேட்ச் ஆனார்.
ஜான்சன் சார்லஸ், ஷமர் ப்ரூக்ஸ் ஆகியோர் முறையே 24, 44 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கீசி கார்டி, கேப்டன் ஷாய் ஹோப் ஆகியோர் கடைசி வரை நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இவ்வாறாக 35.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்து வெஸ்ட் இண்டீஸ் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ஆயான் அஃப்ஸல் கான், ஜஹூர் கான், முஸ்தாபா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
ஆட்டநாயகன் விருதை வென்றார் பிராண்டன் கிங்.
டாபிக்ஸ்