TNPL 2nd Match Preview: இரண்டாவது இடத்துக்கான போட்டி! ஒரே புள்ளிகளை பெற்றிருக்கும் நெல்லை - திண்டுக்கல் பலப்பரிட்சை
ஒரே புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருந்து வரும் நெல்லை - திண்டுக்கல் அணிகளுக்கு இடையே இரண்டாம் இடத்தை பிடிக்கபோவது யார் என்பதற்கான பலப்பரிட்ச்சையாக இன்றைய போட்டி அமைகிறது.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 23வது போட்டி நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு இந்த போட்டியானது தொடங்குகிறது.
இந்த சீசனில் இரு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுள்ளது. ரன்ரேட் அடிப்படையில் நெல்லை அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திலும், திண்டுக்கல் டிராகன்ஸ் 3வது இடத்திலும் உள்ளது. எனவே இன்று இவ்விரு அணிகளும் மோதிக்கொள்ளும் போட்டி இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கான ரேஸாகவே அமைகிறது.
இதுவரை இந்த இரு அணிகளும் மோதியிருக்கும் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன. நெல்லை அணியில் சர்வதேச அளவில் அனுபவம் பெற்ற வீரர்கள் இல்லாவிட்டாலும், சந்தீப் வாரியர், சோனு யாதவ், அருண் கார்த்திக் போன்ற உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி பெயரெடுத்த வீரர்கள் உள்ளார்கள்.
திண்டுக்கல் அணியை பொறுத்தவரை சர்வதேச வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பிரதான வீரர்களாக உள்ளனர்.
இந்த சீசனில் போட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் அணியாக நெல்லை உள்ளது. அத்துடன் நடப்பு சீசனில் அடிக்கப்பட்ட இரண்டு சதங்களில் ஒரு சதமடித்த குருசாமி அஜிதேஷ் நெல்லை அணியில்தான் இடம்பிடித்துள்ளார்.
அதேபோல் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் லிஸ்டில் திண்டுக்கல் வீரர் சரவண குமார் 10 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் உள்ளார். அந்த அணியை சேர்ந்த ஆல்ரவுண்ரான ஷிவம் சிங் 211 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் லிஸ்டில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
எனவே இன்று மோத இருக்கும் இந்த இரு அணிகளை பொறுத்தவரை திண்டுக்கல் பலம் வாய்ந்ததாக இருந்தாலும், தற்போது புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில் இரண்டாவது இடத்தை பிடிக்கும்.
இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நேரலையாக காணலாம். அத்துடன் Fancode செயலியில் ஆன்லைனில் நேரடியாக ஸ்டீரிமிங் செய்து பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9