Salem vs Trichy: முதல் வெற்றிக்கான தேடல்! சொந்த ஊருக்கு எதிராக களமிறங்கும் நடராஜன்
ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் போட்டிகள் அடுத்த மைதானமான திண்டுக்கல்லில் வைத்து நடைபெறவுள்ளது. சொந்த மாவட்டமான சேலம் அணிக்கு எதிராக யார்க்கர் மன்னன் நடராஜன் களமிறங்க இருப்பதால் அவரது ஆட்டம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
டிஎன்பிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் 7வது போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் - பால்சி திருச்சி அணிகள் மோதவுள்ளன. இன்று நடைபெற முதல் போட்டியாக இது அமைந்துள்ளது. மாலை 3.15 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
முதல் ஆறு போட்டிகள் கோவையில் நடைபெற்ற நிலையில், இந்த வாரத்தில் வரும் வியாழக்கிழமை வரை மொத்தம் 7 போட்டிகள் திண்டுக்கல்லில் வைத்து நடைபெறவுள்ளன.
சேலம் ஸ்பார்ட்ன்ஸ், பால்சி திருச்சி இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியில் விளையாடியுள்ள நிலையில், இரண்டு அணிகளும் தோல்வியை தழுவியுள்ளன. திருச்சி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீழ்த்தியது. அதேபோல் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக 52 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி தோல்வியை தழுவியது. தற்போது புள்ளிப்பட்டியலில் திருச்சி அணி 5வது இடத்திலும், சேலம் அணி 6வது இடத்திலும் உள்ளன.
திருச்சி அணியில் நட்சத்திர வீரராக இருக்கும் யார்க்கர் மன்னன் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் அணிக்கு எதிராக விளையாடவுள்ளார். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டிதான் நடராஜனின் சொந்த ஊர். நடராஜனுக்கு ஐபிஎல், சர்வதேச அனுபவம் இருப்பதால் அவரது ஆட்டம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் அணியை பொறுத்தவரை அவர்களது அணியில் மொத்தம் 18 பேர் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல் தொடர்களில் விளையாடிய பிரபலான வீரர்கள் யாரும் அணியில் இல்லை. முழுக்க உள்ளூர் மற்றும் இளம் வீரர்களை நம்பியே அந்த அணி களமிறங்கவுள்ளது.
இரு அணிகளும் முதல் வெற்றியை நோக்கிய களமிறங்க இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இந்த போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கும்.
பால்சி திருச்சி அணி ருபி வாரியர்ஸ் திருச்சி என்ற பெயரில் கடந்த சீசனிகளில் விளையாடியது. அதேபோல் ஆல்பர்ட் தூத்டி பேட்ரியாட்ஸ் என்ற பெயரில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி இருந்தது. இதுவரை இந்த இரு அணிகளும் 5 முறை நேருக்கு நேர் மோதி கொண்ட நிலையில் 4 முறை திருச்சி அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ஸ் தமிழ் சேனலில் நேரடியாக காணலாம். FanCode மொபைல் செயலி மூலம் ஆன்லைனில் ஸ்டீமிங்கில் கண்டு ரசிக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9