TNPL 2023: கோவையில் முதல் போட்டி - வெளியான முழு அட்டவணை! அடுத்த ஆண்டில் மகளிர் டிஎன்பிஎல்
டிஎன்பிஎல் 2023 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த முறை சேலத்தில் அதிகமாக 10 போட்டிகள் நடைபெறவுள்ளன. அத்துடன் அடுத்த ஆண்டில் மகளிருக்கான டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் என்ற அழைக்கப்படும் டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎல் 2023 கிரிக்கெட் போட்டிகள் கோவையில் 12ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் - ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரின் இறுதிப்போட்டி ஜூலை 12ஆம் தேதி நெல்லையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஏழாவது சீசனாக நடைபெறும் இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ்,நெல்லை ராயல் கிங்ஸ், சீயசெம் மதுரை பேந்தர்ஸ், லைகா கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி என 8 அணிகள் பங்கேற்கின்றன.
நெல்லை, திண்டுக்கல், சேலம், கோவை என நான்கு மைதானங்களில் இந்த தொடருக்கான போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடரில் ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் மோதி, டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அனைத்து போட்டிகளும் மாலை 7 மணிக்கு தொடங்குகின்றன. இரண்டு போட்டிகள் நடைபெறும் நாளில் முதல் போட்டி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
ஜூலை 7ஆம் தேதி இரவு 7 மணிக்கு குவாலிபயர் 1 போட்டியும், 8ஆம் தேதி இரவு 7 மணிக்கு எலிமினேட்டர் போட்டியும் சேலத்தில் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து குவாலிபயர் 2 போட்டி ஜூலை 10ஆம் தேதி நெல்லையில் நடைபெறுகிறது. இந்த முறை சேலத்தில் 10 ஆட்டங்கள் நடக்கின்றன.
இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவி செயலாளர் ஆர்.என்.பாபா சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டிஎன்பிஎல் 7வது சீசனில் 28 லீக் போட்டிகள், 4 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 25 நாள்கள் நடைபெறும் இந்த தொடரில் முதல் முறையாக டிஆர்எஸ் முறை அமல்படுத்தப்படுகிறது. அத்துடன் இம்பேக்ட் வீரர் விதிமுறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அனைத்து போட்டிகளையும் காண்பதற்கு சாதாரண டிக்கெட் ரூ.200, உணவுடன் கூடிய டிக்கெட் ரூ.1,500க்கு என விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 13 அல்லது 14ஆம் தேதி தொடங்கும்.
டிஎன்பிஎல் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக கோப்பையுடன் ரூ.50 லட்சம் வழங்கப்படும். இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சம், மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
அதேபோல் ஐந்து முதல் எட்டாவது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.12.50 லட்சம் வழங்கப்படும். பரிச்சுத்தொகையாக மொத்தம் ரூ.1 கோடி 70 லட்சம் வழங்கப்படுகிறது.
இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி ஆகிய சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
மாவட்ட அளவில் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் 37 மாவட்டங்களில் வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு 8 நகரங்களில் அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் பெண்களுக்கான டிஎன்பிஎல் போட்டி நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் முறையாக டிஎன்எல்பிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்படும் டிஆர்எஸ் விதிமுறையில் வைடு, நோபால்களுக்கான ஆன்-பீல்டு கால்களுக்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாக்அவுட் போட்டிகள் அனைத்துக்கும் ஒரு ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்