தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl Final: வெற்றிப் பெறப் போவது யார்?-நடப்பு சாம்பியன் கோவை நெல்லையுடன் மோதல்?

TNPL Final: வெற்றிப் பெறப் போவது யார்?-நடப்பு சாம்பியன் கோவை நெல்லையுடன் மோதல்?

Manigandan K T HT Tamil
Jul 12, 2023 06:10 AM IST

T20 Cricket: லைகா கோவை கிங்ஸ் அணியைப் பொருத்தவரை அந்த அணியின் நட்சத்திர வீரரும் இந்த சீஸனில் அதிக ரன்களைக் குவித்த 2வது வீரருமான சாய் சுதர்ஷன் இல்லாத நிலையிலும் அந்த அணியின் பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

கோப்பையுடன் கோவை கேப்டன் ஷாரூக் கான், நெல்லை கேப்டன் அருண் கார்த்திக்
கோப்பையுடன் கோவை கேப்டன் ஷாரூக் கான், நெல்லை கேப்டன் அருண் கார்த்திக் (@TNPL)

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னதாக, குவாலிஃபையர் 1ல் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது முறை தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டிக்குள் ஷாரூக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் முதல் அணியாக நுழைந்தது.

மறுபுறம் நெல்லை ராயல் கிங்ஸ் தங்களின் எலிமினேட்டரில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குவாலிஃபையர் 2-க்கு முன்னேறி, கடைசிப் பந்துவரை நீடித்த அந்தப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸிற்கு எதிராக நம்பமுடியாத மகத்தான வெற்றியைப் பதிவு செய்து முதன்முறையாக தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

லைகா கோவை கிங்ஸ் அணியைப் பொருத்தவரை அந்த அணியின் நட்சத்திர வீரரும் இந்த சீஸனில் அதிக ரன்களைக் குவித்த 2வது வீரருமான சாய் சுதர்ஷன் இல்லாத நிலையிலும் அந்த அணியின் பேட்டர்கள் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர்.

குறிப்பாக சுஜய், சுரேஷ் குமார், சச்சின், முகிலேஷ் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்க இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்ட ஷாரூக் கான் மற்றும் ராம் அர்விந்த் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் 14 விக்கெட்களை எடுத்து அதிக விக்கெட்கள் எடுத்த பெளலர்களின் பட்டியலில் 3வது இடத்திலுள்ள கேப்டன் ஷாரூக் கான். கெளதம் தாமரை கண்ணன்(11 விக்கெட்கள்), எம் சித்தார்த் (10 விக்கெட்கள்) எம் முகமது (10 விக்கெட்கள்) மற்றும் வி யுதீஷ்வரன்(8 விக்கெட்கள்) போன்ற இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களும் நிறைந்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த முறை சாம்பியன் பட்டத்தை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் பகிர்ந்து கொண்ட லைகா கோவை கிங்ஸ் இம்முறை கண்டிப்பாக நெல்லை ராயல் கிங்ஸை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது முறை டி.என்.பி.எல் பட்டத்தைக் கைப்பற்ற முயற்சிக்கும்.

இருந்தாலும் இந்த சீஸனில் லைகா கோவை கிங்ஸ் தோற்ற ஒரே அணி நெல்லை ராயல் கிங்ஸ் மட்டுமே என்பதை அந்த அணி கவனத்தில் கொள்ளும். அத்துடன், சொந்த மண்ணில் நெல்லையை எதிர்த்து விளையாடுவது அந்த அணிக்கு சற்று சவாலாக இருக்கும்.

மறுபுறம், முதன்முறையாக டி.என்.பி.எல் வரலாற்றில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த நெல்லை ராயல் கிங்ஸ் சமீபத்திய வெற்றிகளால் புது உற்சாகம் பெற்றுள்ளது. மேலும் தங்களின் சொந்த மண்ணில் இறுதிப்போட்டியில் விளையாடுவது அவர்களின் கூடுதல் பலம்.

அந்த அணியின் கேப்டனும் டி.என்.பி.எல் தொடரில் 3 சதங்களை அடித்த ஒரே வீரருமான கே.பி. அருண் கார்த்திக் நெல்லைக்கு தூணாக இருந்தாலும் இந்த சீஸனில் பல இளம் வீரர்கள் அந்த அணிக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளனர்.

முக்கியமாக அஜிதேஷ் மற்றும் ரித்திக் ஈஸ்வரனின் அபாரமான பேட்டிங் எதிரணியினரை நடுங்கச் செய்துள்ளது மற்றும் டி.என்.பி.எல் 2023 சீஸனில் 384 ரன்களுடன் அதிக ரன்களை எடுத்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு கேப்பை ஜி அஜிதேஷ் தன் வசப்படுத்தியுள்ளார்.

இந்த சீஸனில் எவ்வளவு அதிகமான ஸ்கோரையும் சேஸ் செய்யக்கூடிய பேட்டர்கள் நிறைந்துள்ள நெல்லை ராயல் கிங்ஸில் பெளலிங்கைப் பொறுத்தவரை பொய்யாமொழி(13 விக்கெட்கள்) மற்றும் சோனு யாதவ்(9 விக்கெட்கள்) தவிர மற்ற பெளலர்கள் யாரும் இந்த சீஸனில் பெரிதாக சோபிக்கவில்லை.

கடுமையான பல சவால்களைக் கடந்து தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 தற்போது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது. இறுதிநாளில் இந்த தொடரின் 2வது சாம்பியனாக லைகா கோவை கிங்ஸ் வாகை சூடுமா? அல்லது முதன்முறையாக நெல்லை ராயல் கிங்ஸ் மகுடம் சூடுமா? என்பதை திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை இரவு தெரிந்துவிடும்

இறுதிப்போட்டிக்கு முன்பாகலைகா கோவை கிங்ஸ் கேப்டன் ஷாரூக் கான் பேசுகையில், “இறுதிப்போட்டியில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளோம். லீக் பிரிவிலும் குவாலிஃபையரிலும் ஒரு அணியாக நாங்கள் என்ன செய்தோமோ அதையே இறுதிப்போட்டியிலும் செய்ய முயற்சிப்போம்.

எதிரணியின் பலவீனத்தை அலசுவதைவிட எங்களின் பலத்தைக் கொண்டு நாங்கள் களமிறங்கவுள்ளோம். இறுதிப்போட்டிக்கு என்று பிரத்யேகமாக நாங்கள் தயாராகவில்லை. எங்கள் அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு கடமை உள்ளது அதை உணர்ந்து செயல்பட்டாலே போதும்,நாங்கள் எப்போதும் இதைத்தான் பின்பற்றுகிறோம்”, என்று ஷாரூக் கான் தெரிவித்தார்.

இறுதிப்போட்டிக்கு முன்பாகநெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன் கே.பி அருண் கார்த்திக் பேசுகையில், "தொடர்ச்சியான வெற்றிகள் எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. அதோடு சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்பு விளையாடுவது பலமாக இருந்தாலும் எதிரணியை குறைத்துமதிப்பிட முடியாது. லீக் பிரிவில் லைகா கோவை கிங்ஸை நாங்கள் வீழ்த்தியிருந்தாலும் அன்றைய நாளில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அந்த அணியே வெற்றி பெறும்.

லைகா கோவை கிங்ஸ் கடந்த சீஸனின் சாம்பியனாகவும் இந்த சீஸனின் டேபிள் டாப்பராகவும் இருந்துள்ளனர். அனைவரும் கூறுவது போல, இரு அணிகளின் அணுகுமுறையும் ஒரே மாதிரியாக இந்த தொடரில் இருந்துள்ளதால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்”, என்று கே.பி அருண் கார்த்திக் கூறினார்.

இந்தப் போட்டியை ஸ்டார்ஸ்போர்ட்ஸ், ஃபேன்கோடு செயலி ஆகியவற்றில் கண்டு ரசிக்கலாம். இன்றிரவு 7.15 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

முன்னதாக, நிறைவு விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.

WhatsApp channel

டாபிக்ஸ்