தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl 2023: டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் லீக் சுற்று வரை நிகழ்த்தப்பட்ட சாதனைகள்-ஒரு பார்வை!

TNPL 2023: டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் லீக் சுற்று வரை நிகழ்த்தப்பட்ட சாதனைகள்-ஒரு பார்வை!

Manigandan K T HT Tamil
Jul 06, 2023 05:30 PM IST

நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய 4 அணிகள் ப்ளேஆஃப்ஸிற்கான முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளது.

அதிக விக்கெட்டுகளை எடுத்து பர்ப்பிள் கேப் வைத்துள்ள பவுலர் குர்ஜப்னீத் சிங், அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு கேப் வைத்துள்ள பேட்ஸ்மேன் சாய் சுதர்ஷன்
அதிக விக்கெட்டுகளை எடுத்து பர்ப்பிள் கேப் வைத்துள்ள பவுலர் குர்ஜப்னீத் சிங், அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு கேப் வைத்துள்ள பேட்ஸ்மேன் சாய் சுதர்ஷன் (tnpl)

ட்ரெண்டிங் செய்திகள்

இதுவரை 28 லீக் போட்டிகளில் 8114 ரன்களும் 358 விக்கெட்களும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீஸனில் 26 அறிமுக வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இப்படி பல குறிப்பிடும்படியான விஷயங்கள் நிகழ்ந்த நிலையில் தற்போது டி.என்.பி.எல் 2023 ப்ளேஆஃப்ஸ் கட்டத்தை நெருங்கியுள்ளது.

நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய 4 அணிகள் ப்ளேஆஃப்ஸிற்கான முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளது.

இதில், முதலிரண்டு இடங்களிலுள்ள லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் முதல் குவாலிஃபையரிலும் மூன்று மற்றும் நான்காம் இடத்தைப் பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணிகள் எலிமினேட்டரிலும் விளையாடவுள்ளனர்.

முதல் குவாலிஃபையர் ஜூலை 7ஆம் தேதியும், எலிமினேட்டர் போட்டி 8ஆம் தேதியும் நடைபெறவுள்ளது மற்றும் முதல் குவாலிஃபையரில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற, தோல்வியடைந்த அணி ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் 2வது குவாலிஃபையரில் எலிமினேட்டரில் வென்ற அணியுடன் மோதும் அதில் வெல்லும் அணிகள் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் இந்த சீஸனின் இறுதிப்போட்டியில் மோதுவார்கள்.

இந்த சீஸனில் இதுவரை 28 லீக் போட்டிகள் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. மழையின் காரணமாக சில போட்டிகளில் சிறிது தடை ஏற்பட்டாலும் அனைத்துப் போட்டிகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு போட்டிக்கான முடிவை எட்டியது.

லீக் சுற்றின் முடிவில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் விளையாடிய 7 ஆட்டங்களில் ஒரே ஒரு தோல்வியை சந்தித்து முறையே முதலிரண்டு இடங்களைப் பிடித்தது. நெல்லை ராயல் கிங்ஸ் 5 வெற்றிகளுடன் 3வது இடத்தையும் சீகம் மதுரை பேந்தர்ஸ் 4 வெற்றிகளுடன் 4வது இடத்தையும் பிடித்தது. ப்ளேஆஃப்ஸ் வாய்ப்பை இழந்த நடப்பு சாம்பியனும் டி.என்.பி.எல் தொடரின் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 வெற்றிகளுடன் 5வது இடத்திற்கு சென்றது.

ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் 2 வெற்றிகளுடன் முறையே 6வது மற்றும் 7வது இடத்தில் நிறைவு செய்ய கடைசி இடத்தைப் பிடித்த புதிய வரவான பால்சி திருச்சி அணி மட்டும் இந்த சீஸனில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் பல குறிப்பிடும் படியான சாதனை அரங்கேறியுள்ளது. முக்கியமாக, இந்த சீஸனின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை திருநெல்வேலியிலுள்ள இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் திண்டுக்கல் டிராகன்ஸின் தொடக்க வீரர்களான ஷிவம் சிங் மற்றும் விமல் குமார் நெல்லை ராயல் கிங்ஸிற்கு எதிராக பதிவு செய்தனர்.

முதல் விக்கெட்டிற்கு இவ்விருவரும் இணைந்து 85 பந்துகளில் 117 ரன்களை சேர்த்தனர். அடுத்தபடியாக சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் திண்டுக்கல் டிராகன்ஸின் ஷிவம் சிங் மற்றும் ஆதித்யா கணேஷ் இணைந்து ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸிற்கு எதிராக 61 பந்துகளில் 105 ரன்கள் குவித்தனர். முதலிரண்டு அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பிலும் திண்டுக்கல் டிராகன்ஸின் அறிமுக வீரரான ஓப்பனர் ஷிவம் சிங் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீஸனின் அதிகபட்ச ஸ்கோரை கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸிற்கு எதிராக 4 முறை சாம்பியன் அணியான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பதிவு செய்தது.

அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 217 ரன்களைக் குவித்தது. திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தப் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸிற்கு எதிராக பால்சி திருச்சி வெறும் 71 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்த சீஸனின் குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது.

ஐபிஎல் 2023 தொடரில் அசத்தலாக செயல்பட்டு அதே ஃபார்முடன் தமிழ்நாடு பிரீமியர் லீக்கிற்கு வந்த இளம் நட்சத்திர வீரர் சாய் சுதர்ஷன் இந்த சீஸனில் விளையாடிய 6 போட்டிகளில் 4 அரைசதங்கள் விளாசி 371 ரன்களைக் குவித்து ஆரஞ்சு கேப்பை தற்போது தன்வசப்படுத்தியுள்ளார்.

திருப்பூர் பவுலர் புவனேஸ்வரன்
திருப்பூர் பவுலர் புவனேஸ்வரன்

ஆனால், இந்தியாவில் நடைபெற்று வரும் முதல் தர போட்டியில் செளத் ஜோன் அணியில் இடம் பிடித்ததால் சாய் சுதர்ஷன் எஞ்சிய டி.என்.பி.எல் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அவருக்கு அடுத்த இடத்திலுள்ள மற்ற பேட்டர்களால் அவரை முந்திச் செல்வது சற்றுக் கடினமாகவே உள்ளது.

பெளலர்களைப் பொறுத்தவரை இந்த சீஸனில் பல இளம் வீரர்களும் அனுபவ வீரர்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி சீகம் மதுரை பேந்தர்ஸின் குர்ஜப்நீத் சிங் 13 விக்கெட்களுடன் பர்ப்பிள் கேப்பை தன்வசப்படுத்தியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, லைகா கோவை கிங்ஸின் கேப்டன் ஷாரூக் கானும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸின் பி புவனேஷ்வரனும் 13 விக்கெட்களுடன் முறையே 2வது மற்றும் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர். ப்ளேஆஃப்ஸில் இடம் பிடித்துள்ள குர்ஜப்நீத் மற்றும் ஷாரூக் கானுக்கு இடையே பர்ப்பிள் கேப்பிற்கான போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த சீஸனில் இரண்டு சதங்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. இரண்டையும் நெல்லை ராயல் கிங்ஸின் பேட்டர்களான ஜி அஜிதேஷ் மற்றும் அந்த அணியின் கேப்டன் கே.பி அருண் கார்த்திக் அடித்தனர். இதில் ஜி அஜிதேஷ் டி.என்.பி.எல் தொடரில் தன் முதல் சதத்தை பதிவு செய்ய, மற்றொரு புறம் கே.பி அருண் கார்த்திக் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் 3வது சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

அரைசதங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக லைகா கோவை கிங்ஸின் சாய் சுதர்ஷன் 4 அரைசதங்களை பதிவு செய்தார். அவருக்கு அடுத்தபடியாக திண்டுக்கல் டிராகன்ஸின் இளம் வீரர் ஷிவம் சிங் தொடர்ச்சியாக 3 அரைசதங்களை அடித்து அசத்தினார்.

இந்த சீஸனில் ஜெ சுரேஷ் குமார்(21), ராம் அர்விந்த்(22), சாய் கிஷோர்(23), அனிருத் சீதா ராம்(23) போன்ற வீரர்கள் அதிவேக அரைசதமடித்த பட்டியலில் முன்னணி வகிக்க தனது கடைசி லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸின் கேப்டன் ஷாரூக் கான் தனது அபாரமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 20 பந்துகளில் இந்த சீஸனின் அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்தார் மற்றும் அதிவேக அரைசதமடித்த பட்டியலில் லைகா கோவை கிங்ஸின் 3 பேட்டர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பவுண்டரிகளைப் பொறுத்தவரை அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 39 பவுண்டரிகளையும், அதிக சிக்ஸர்கள் அடித்தப் பட்டியலில் பாபா அபரஜித் 19 சிக்ஸர்களுடன் முதலிடத்தைப் பிடித்தனர்.

பெளலிங்கில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸின் பி புவனேஷ்வரன் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸின் சிலம்பரசன் ஆகிய இருவர் மட்டுமே இந்த சீஸனில் 5 விக்கெட் சாதனையை நிகழ்த்தினர். பி புவனேஷ்வரன் பலம் வாய்ந்த நெல்லை ராயல் கிங்ஸிற்கு எதிராக சிறப்பாக பந்துவீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி தனது அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

சிலம்பரசன் பால்சி திருச்சி அணிக்கு எதிராக அபாரமாக பந்துவீசி வெறும் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதுவரை 7 சீஸன்களாக விளையாடும் இந்த அனுபவ வீரர் முதன்முறையாக 5 விக்கெட் சாதனையை நிகழ்த்தினார்.

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 7வது சீஸன் சர்வதேச கிரிக்கெட் உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் தொடர் துவங்கும் முன்பே பல புதிய மாற்றங்களுடனும் மாறுதல்களுடனும் அரங்கேறியது. முதன் முறையாக ஒரு டொமஸ்டிக் லீக்கில் ஏலம் நடத்தப்பட்டது.

ஐபிஎல் போன்ற மிகப்பெரிய லீக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் வீரர் முறை, டி.ஆர்.எஸ் விதிகள் என்று இதுவரை நிகழ்ந்திடாத பல விஷயங்கள் இம்முறை தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 தொடரில் பின்பற்றப்பட்டது. தற்போது இதற்கெல்லாம் மகுடம் சூட்டும் விதமாக இந்த சீஸனின் பட்டத்தை சூடப்போவது யார் என்ற கேள்விக்கான இறுதிச்சுற்றை நோக்கி இந்த தொடர் நாளை முதல் பயணிக்கவுள்ளது

WhatsApp channel

டாபிக்ஸ்