TNPL 1st Innings: ஜாஃபர் ஜமால் அதிரடி.. பால்சி திருச்சி 146 ரன்கள் குவிப்பு
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl 1st Innings: ஜாஃபர் ஜமால் அதிரடி.. பால்சி திருச்சி 146 ரன்கள் குவிப்பு

TNPL 1st Innings: ஜாஃபர் ஜமால் அதிரடி.. பால்சி திருச்சி 146 ரன்கள் குவிப்பு

Manigandan K T HT Tamil
Jul 05, 2023 10:29 PM IST

இந்த சீஸனில் தங்களின் முதல் வெற்றியை பால்சி திருச்சி பதிவு செய்யுமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

96 ரன்கள் விளாசிய திருச்சி வீரர் ஜாஃபர் ஜமால்
96 ரன்கள் விளாசிய திருச்சி வீரர் ஜாஃபர் ஜமால் (TNPL)

முன்னதாக, மழையின் காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்த சீஸனில் தங்களின் முதல் வெற்றியைத் தேடி களமிறங்கிய பால்சி திருச்சி மீண்டும் ஒரு மோசமான தொடக்கத்தைப் பெற்றது. 

அவர்களின் தொடக்க வீரர் கே ராஜ்குமார்(2) விக்கெட்டை சந்தீப் வாரியர் கைப்பற்ற அடுத்து வந்த டி சரண்(0) ரன் எதுவும் எடுக்காமல் சோனு யாதவிடம் இழந்து வெளியேறினார். பவர்ப்ளே முடிவில் வெறும் 27 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து பால்சி திருச்சி மோசமான நிலையிலிருந்த போது திடீரென மழைக் குறுக்கிட ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது

மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்ட போது ஒரு ஓவர் குறைவாக 19வது ஓவர் போட்டியாக ஆட்டம் மாற்றியமைக்கப்பட்டது. பால்சி திருச்சியின் கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூவுடன் இணைந்து ஜாஃபர் ஜமால் அதிரடியாக விளையாடி அணியின் ரன் கணக்கை வேக உயர்த்தினார். அனுபவ வீரர் பொய்யாமொழியின் பந்துவீச்சில் கங்கா ஸ்ரீதர் ராஜூ(18) தனது விக்கெட்டை இழந்தாலும் ஜாஃபர் ஜமால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தன் முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். 

பால்சி திருச்சி அணிக்காக 5வது விக்கெட்டிற்கு ஜாஃபர் ஜமால் மற்றும் டாரல் ஃபெராரியோ இணைந்து 67 ரன்கள் சேர்த்தனர். அவர்களின் பார்ட்னர்ஷிப்பால் பால்சி திருச்சியின் ஸ்கோர் கணக்கு மளமளவென உயர்ந்தது. குறிப்பாக, ஜாஃபர் ஜமால் திருநெல்வேலியில் சிக்ஸர் மழைப் பொழிய அரங்கிலிருந்த அனைத்து ரசிகர்களும் உற்சாகமடைந்தனர். தனது இன்னிங்ஸில் ஜாஃபர் ஜமால் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை விளாசி 53 பந்துகளில் 96 ரன்கள் குவித்து சதமடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார்.

கடைசி ஓவரில் ஆண்டனி தாஸ் 5 பந்துகளில் 10 ரன்கள் எடுக்க, பால்சி திருச்சி இறுதியில் 19 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்தது. அந்த அணிக்கு தனி ஒருவனாக போராடி ஜாஃபர் ஜமால் 96 ரன்களைக் குவித்தார். நெல்லை ராயல் கிங்ஸின் பெளலிங்கைப் பொறுத்தவரை பொய்யாமொழி 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்

முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய ஜாஃபர் ஜமால் பேசுகையில், “கடைசிப் போட்டியில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியளித்தது. கண்டிப்பாக இந்தப் போட்டியில் வென்று இந்த சீஸனை வெற்றியுடன் முடிக்க விரும்புகிறோம்”, என்று தெரிவித்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.