TNCA: 8 அணிகள்! தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மகளிர் டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் - முழு விவரம்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 15 முதல் 23 வயது உட்பட்டோர், சீனியர் வீராங்கனைகள் பங்குபெறும் டி20 மற்றும் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடத்தப்படவுள்ளது. இந்த தொடர்களில் சிறப்பாக விளையாடும் வீராங்கனைகள் தமிழ்நாடு மகளிர் அணியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.்
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்கள் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
முதலில் டி20 போட்டிகள் ஜூன் 26 தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் சென்னை செங்குன்றத்தில் உள்ள ஸ்டேக், கேளம்பாக்கத்தில் உள்ள ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அகாடமி மைதானங்களில் நடக்கிறது.
இதில் கிரீன் இன்வாடெர்ஸ், சில்வர் ஸ்டிரைக்கர்ஸ், பிங்க் வாரியர்ஸ், புளூ அவெஞ்சர்ஸ், எல்லோ சேலஞ்சர்ஸ், ரெட் ரேஞ்சர்ஸ், ஆரஞ்ச் டிராகன்ஸ், பர்பிள் பிளாசர்ஸ் என 8 அணிகள் பங்கேற்கின்றன. சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு பிரேயர் கோப்பை வழங்கப்படும்.
இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.
லீக் சுற்று முடிவில் இரண்டு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி இறுதிப்போட்டியில் விளையாடும். ஒரு நாளில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் காலை 8.45 மணிக்கு தொடங்குகிறது. இதன் பின்னர் இரண்டாவது ஆட்டம் பகல் 12.45 மணிக்கு தொடங்கி நடைபெறும்.
இதைத்தொடர்ந்து பெண்களுக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 1 முதல் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளும் சென்னை செங்குன்றம் ஸ்டேக், கேளம்பாக்கம் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அகாடமி மைதானங்களில் நடைபெறவுள்ளது
20 ஓவர் தொடரில் விளையாடும் 8 அணிகளும், 50 ஓவர் தொடரிலும் பங்கேற்கின்றன. டி20 தொடரை போல் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்று முடிவில் முதல் இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.
நாள்தோறும் இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில், முதல் போட்டி காலை 9 மணிக்கு, இரண்டாவது போட்டி 9.15 மணிக்கு தொடங்கி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளில் தலா 15 வீராங்கனைகள் இடம் பெறுவார்கள். இதில் 15, 19, 23 வயதுக்கு உட்பட்ட வீராங்கனைகள் மற்றும் சீனியர் வீராங்கனைகள் இடம் பெறுவார்கள்.
இந்த தொடரில் விளையாடும் சிறந்த வீராங்கனைகள் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்