BCCI: வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் லெஜண்ட்டை சந்தித்த இந்திய வீரர்கள்!
Team India: இந்திய வீரர்கள் அவரை சந்தித்த வீடியோவை பிசிசிஐ நிர்வாகம் டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறது. வரும் 12ம் தேதி அந்நாட்டு அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
2 டெஸ்ட், 3 ஒரு நாள், 5 டி20 ஆட்டங்களில் இரு அணிகளும் விளையாடுகின்றனர். பார்படாஸில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைமைப் பயிற்சியாள்ர ராகுல் டிராவிட்டும் அங்கும் தான் இருக்கிறார். பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்திய வீரர்கள் ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது.
ஆம். அவர்கள் ஆச்சரியமடைந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அப்படியென்ன ஆச்சரியப்படும் அளவுக்கு நடந்தது என கேட்கிறீர்களா? பார்டாஸ் மைதானத்திற்கு கார்பீல்ட் சோபர்ஸ் வந்தார். இவர், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர். இவர் ஒரு கிரிக்கெட் லெஜண்ட். தற்போது அவருக்கு 86 வயதாகிறது. தனது மனைவியுடன் மைதானத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார்.
அப்போது இந்திய வீரர்கள் ஆச்சரியமடைந்து அவரை சந்தித்து கைகுக்கு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இளம் வீரர் சுப்மன் கில்லை ராகுல் டிராவிட் சோபர்ஸுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் இந்திய வீரர்கள் சோபர்ஸ் சந்தித்த இடம் அவரது பெயர் சூட்டப்பட்டுள்ள பெவிலியனுக்கு அருகில் என்பது தான்.
இந்திய வீரர்கள் அவரை சந்தித்த வீடியோவை பிசிசிஐ நிர்வாகம் டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளது.
முதலில் சோபர்ஸை ரோகித் சர்மா சந்தித்து நன்றி சார் என்று கூறுகிறார். அவரைத் தொடர்ந்து ரஹானே, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் என அடுத்தடுத்து அவருடன் கைகுலுக்கினர்.
எங்களின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என சோபர்ஸிடம் கில்லை அறிமுகம் செய்து வைத்தார் டிராவிட்.
கடைசியாக டிராவிட் சோபர்ஸுடன் ஒரு சில வார்த்தைகள் பேசுவதுடன் வீடியோ நிறைவு பெறுகிறது.
சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராகக் கருதப்படும் சோபர்ஸ், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இரண்டு தசாப்தங்களாக விளையாடினார் - 1954 முதல் 1974 வரை அவர் விளையாடினார்.
சோபர்ஸ் தனது 17 வயதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பந்து வீச்சாளராக அறிமுகமானார், ஆனால் பேட்டிங்கில் சிறந்து விளங்கத் தொடங்கினார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சோபர்ஸ் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 375 ரன்கள் எடுத்தார்.
ஒரு இன்னிங்ஸில் அப்போதைய அதிகபட்ச தனிநபர் டெஸ்ட் ஸ்கோர் இதுவாகும். இது கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக முறியடிக்க முடியாத சாதனையாக இருந்தது. பின்னர் மற்றொரு ஜாம்பவான் பிரையன் லாராவால் இச்சாதனை முறியடிக்கப்பட்டது.
1968 ஆகஸ்டில், சோபர்ஸ் ஒரு முதல் தர போட்டியில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை அடித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கர்ஃபீல்டு சோபர்ஸ், 57.78 சராசரியுடன் 8032 ரன்களையும், 235 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 1975 ஆம் ஆண்டில் ராணி இரண்டாம் எலிசபெத்தால் நைட்ஹூட் பட்டம் பெற்ற சோபர்ஸ், 2009 ஆம் ஆண்டில் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார்.
1964 ஆம் ஆண்டில் ஆண்டின் சிறந்த விஸ்டன் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்ற இவர், 2000 ஆம் ஆண்டில் நூற்றாண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டாபிக்ஸ்