Tamilnadu Sports: விளையாட்டுத் துறை உள்கட்டமைப்புக்காக ரூ.2 கோடி நிதியளித்த SNJ குழுமம்
Sports Minister Udhyanidhi Stalin: ‘நம் வீரர்-வீராங்கனைகளின் திறமைகளைச் சாதனைகளாக்கும் முயற்சிக்கு வலுசேர்த்த அந்நிறுவனத்துக்கு என் அன்பும், நன்றியும்.’
தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பை உலகத்தரத்திற்கு உயர்த்தவும், நம் விளையாட்டு வீரர்களின் திறமைக்கு துணை நிற்கவும், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு SNJ குழுமம் தங்கள் பங்களிப்பாக ரூ.2 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
நம் வீரர்-வீராங்கனைகளின் திறமைகளைச் சாதனைகளாக்கும் முயற்சிக்கு வலுசேர்த்த அந்நிறுவனத்துக்கு என் அன்பும், நன்றியும் என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் 17 இடங்களில் ஜுலை 01-ந் தேதி முதல் ஜுலை மாதம் 25-ந் தேதி வரை முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த போட்டிகளில் பங்கேற்கவுள்ள 27,000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள், பயிற்றுநர்கள், நடுவர்கள், அலுவலர்கள் மற்றும் தேசிய மாணவர் படை தன்னார்வலர்கள் அனைவருக்கும் போட்டி நடைபெறுகின்ற அனைத்து நாட்களிலும் தங்குவதற்கு வசதியாக சென்னையில் 2000-க்கும் மேற்பட்ட அறைகள் மற்றும் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ மாணவியர் விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் உணவு மற்றும் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு, பேருந்து வசதிகள், மருத்துவம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் சிறந்த முறையில் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
போட்டிகளை சிறப்பாக நடத்திட ஏதுவாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், மாநகர போக்குவரத்து கழகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை மற்றும் காவல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்