T. Natarajan: முதல்முறையாக மகன் 'யார்க்கர் கிங்' நடராஜன் விளையாடிய போட்டியை நேரில் கண்டு ரசித்த பெற்றோர்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  T. Natarajan: முதல்முறையாக மகன் 'யார்க்கர் கிங்' நடராஜன் விளையாடிய போட்டியை நேரில் கண்டு ரசித்த பெற்றோர்

T. Natarajan: முதல்முறையாக மகன் 'யார்க்கர் கிங்' நடராஜன் விளையாடிய போட்டியை நேரில் கண்டு ரசித்த பெற்றோர்

Manigandan K T HT Tamil
Jun 25, 2023 11:13 PM IST

நடராஜனின் சொந்த ஊர் சேலம் தான். சேலத்தில் போட்டி நடந்ததால் இந்தப் போட்டியை மிஸ் செய்யாமல் அவரது பெற்றொரும் குடும்பத்தினரும் வந்தனர்.

திருச்சி அணியில் விளையாடிவரும் டி.நடராஜனின் பெற்றோர். அவர்களை பேட்டி காணும் தொகுப்பாளர் சஸ்டிகா (வலது)
திருச்சி அணியில் விளையாடிவரும் டி.நடராஜனின் பெற்றோர். அவர்களை பேட்டி காணும் தொகுப்பாளர் சஸ்டிகா (வலது)

அவரது பெற்றொரு அவரது கிரிக்கெட் போட்டியை நேரடியாக பார்ப்பது இதுவே முதல் முறையாகும்.

சேலத்தில் 1991ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி பிறந்த நடராஜன், இளம் வயது முதலே கிரிக்கெட் மீது தீராக் காதல் கொண்டவர். தனது விடா முயற்சியால், டிஎன்பிஎல் கிரிக்கெட், ஐபிஎல் என விளையாடி தனது திறமையை நிரூபித்து இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்தார்.

உலகம் முழுவதும் முன்னணி கிரிக்கெட் வீரர்களின் கவனத்தையும் தனது தனித்துவமான யார்க்கர் பந்துவீச்சு திறமையால் ஈர்த்தார்.

சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் நடராஜன். இவரது தந்தை எஸ்.தங்கராசு, ஒரு விசைத்தறியில் வேலை செய்யும் நெசவாளர், இவரது தாயார் ஒரு துரித உணவு கடையை நடத்தி வருகிறார். ஐந்து குழந்தைகளில் மூத்தவர் நடராஜன். நடராஜன் தனது பள்ளித் தோழி பவித்ராவை 2018 ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

2020 நவம்பரில், இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஐபிஎல் கிரிக்கெட்டில் இவர் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியிடம் திருச்சி தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்திலும் திருச்சி அணி தோல்வி அடைந்தது. இந்த சீசனில் திருச்சி இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட ஜெயிக்கவில்லை. அந்த அணிக்கு சோகம் தொடர்கிறது.

அதேநேரம், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் 2வது வெற்றியை ருசித்தது.

பால்சி திருச்சி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் முதல் இன்னிங்ஸை விளையாடியது.

அந்த அணியில் தொடக்க வீரர்களாக எஸ்.ராதாகிருஷ்ணன், துஷார் ரஹேஜா ஆகியோர் விளையாடினர்.

ரஹேஜா 3வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். பின்னர், சாய் கிஷோர் களம் புகுந்தார். இவரும், ராதாகிருஷ்ணனும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்த உதவினர்.

ராதாகிருஷ்ணன் 45 ரன்களில் ஆட்டமிழக்க சாய் கிஷோர் அரை சதம் விளாசி அவுட்டானார்.

அனிருத்தும் அரை சதம் விளாசினார். நடராஜன், சிலம்பரசன், ஆண்டனி தாஸ், மோனிஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

திருப்பூர் தமிழன்ஸ் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி போராடி தோற்றது.

கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜு 20 ரன்களிலும், கே.ராஜ்குமார் 22 ரன்களிலும் நடையைக் கட்டினர்.

மோனிஷ் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். டேரில் ஃபெராரியோ மட்டும் நிதானமாக விளையாடி 42 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ராஜ்குமார் 1 ரன்னில் செல்ல, ஆண்டனி தாஸ் 25 ரன்களிலும், ஜாஃபர் ஜமால் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இவ்வாறாக அந்த அணி19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் 9 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. திருப்பூர் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நாளை இரவு சேலத்தில் சேப்பாக் அணிக்கும், மதுரை அணிக்கும் இடையே 18வது லீக் ஆட்டம் நடைபெறவுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.