தமிழ் செய்திகள்  /  Sports  /  Swiss Open: Pv Sindhu Moves Into Pre-quarterfinals; Lakshya Sen, Kidambi Srikanth Also Advance

Swiss Open 2024: அசத்தல் வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிவி சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 21, 2024 09:54 PM IST

2022 ஸ்விஸ் ஓபன் பட்டத்தை வென்ற இந்தியாவின் பிவி சிந்து, தனது முதல் போட்டியில் தாய்லாந்து வீராங்கனை போர்ன்பிச்சா சூயிகீவாங் என்பவரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஸ்விஸ் ஓபன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிவி சிந்து
ஸ்விஸ் ஓபன் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிவி சிந்து

ட்ரெண்டிங் செய்திகள்

பிவி சிந்து வெற்றி

ஒலிம்பிக பதக்க வெற்றியாளரான பிவி சிந்து கடந்த 2022 ஸ்விஸ் ஓபன் பட்டத்தை வென்றார். இதைத்தொடர்ந்து இந்த முறை தனது முதல் போட்யில் தாய்லாந்து வீராங்கனை போர்ன்பிச்சா சூயிகீவாங் என்பவரை எதிர்கொண்டார். இந்த போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பிவி சிந்து 21-12 21-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதையடுத்து தனது அடுத்த போட்டியில் ஜப்பான் நாட்டு வீராங்கனையான டோமோகா மியசாகி என்பவரை எதிர்கொள்கிறார்.

லக்‌ஷயா சென் போராடி வெற்றி

உச்சகட்ட பார்மில் இருந்து வரும் லக்‌ஷயா சென் சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிரெஞ்ச் ஓபன், ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடர்களில் அரையிறுதி வரை முன்னேறினார். இதைத்தொடர்ந்து அந்த பார்முடன் இந்த ஸ்விஸ் ஓபன் தொடரில் பங்கேற்ற அவர், தனது முதல் போட்டியில் மலேசியாவின் லியோங் ஜுன் ஹாவ் என்பவரை எதிர்கொண்டார்.

பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் சுற்றில் 21-19 என முன்னிலை பெற்ற சென், இரண்டாவது செட்டில் 15-21 என கைவிட்டார்.

பின்னர் மூன்றாவது செட்டில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்திய சென் 21-11 என்ற கணக்கில் வென்றார். இந்த போட்டி 62 நிமிடங்கள் வரை நீடித்தது.

அடுத்த சுற்றில் சீனா தைப்பே வீரர் சியா ஹாவ் லீ என்பவரை எதிர்கொள்ள இருக்கிறார் லக்‌ஷயா சென்.

கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

உலகின் முன்னாள் நம்பர் 1 வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், சீனா தைப்பேவை சேர்ந்த வாங் சூ வெய் என்பவரை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே கடினமான போட்டி நிலவியபோதிலும் இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-17, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

இரட்டையர் பிரிவிலும் இந்தியா வெற்றி

மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் பிரியா கொஞ்ஜெங்பாம் மற்றும் ஸ்ருதி மிஸ்ரா, சீனா தைப்பே ஜோடி ஹுவாங் யு-ஹ்சுன் மற்றும் லியாங் டிங் யூ ஆகியோருக்க எதிராக நேர் செட்களில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய இந்திய ஜோடி 21-13, 21-19 என்ற புள்ளிகளில் வெற்றியை பதிவு செய்தது

இரண்டு போட்டிகளில் தோல்வி

இதே போல் மற்றொரு மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய ஜோடி தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஆகியோர் இந்தோனேஷியா ஜோடி மெய்லிசா ட்ரயாஸ் புஸ்பிதா சாரி மற்றும் ரேச்சல் ரோஸ் ஆகியோரை எதிர்கொண்டனர். மூன்று செட்கள் வரை சென்ற இந்த போட்டியில் இந்திய ஜோடி இரண்டாவது செட்டில் மட்டும் வெற்றி பெற்றது.

21-18, 12-21, 21-19 என்ற செட்களில் இந்தோனேஷியா ஜோடியிடம் இந்தியா ஜோடி வீழ்ந்தது.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஹரிஹரன் அம்சகருணன் மற்றும் ரூபன் குமார் ரத்தின சபாபதி, கென்யாவின் மிட்சுஹாஷி மற்றும் ஜப்பானின் ஹிரோகி ஒகாமுரா ஜோடிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவினர். இந்த போட்டியில் 21-19, 21-14 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஜோடி தோல்வியுற்றது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்