HT Sports Special: பேட்டிங், பவுலிங் என எதிரணியினரை இரட்டை தாக்குதல் செய்யும் சூரசம்ஹாரன்! அதிரடி மன்னன் சனத் ஜெயசூர்யா
உலக கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களும், 300 விக்கெட்டுகள் மேல் எடுத்த ஒரே வீரராக இருந்து வருபவர் சனத் ஜெயசூர்யா. வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டர் என பெயரெடுத்த ஜெயசூர்யா, தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏராளமான உலக சாதனைகளை புரிந்துள்ளார்.
1990 காலகட்டத்தில் ஜெயசூர்யா என்ற பெயர் கிரிக்கெட் உலகில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயராக இருந்தது. இதற்கு சான்றாக அவர் வெளிப்படுத்திய அதிரடியான பேட்டிங், எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்யும் பவுலிங் என எதை வேண்டுமானாலும் கூறனால். தான் விளையாடும் போட்டிகள் பேட்டிங், பவுலிங் அல்லது இரண்டிலும் தன்னால் ஆன சிறந்த பங்களிப்பை ஒவ்வொரு போட்டிகளிலும் செய்து வந்த வீரர்களில் ஒருவராக ஜெயசூர்யா இருந்துள்ளார்.
இலங்கை அணியின் இடது கை அதிரடி பேட்ஸ்மேன், இடது கை ஸ்பின்னர், சிறந்த பீல்டர் என முழுமையான வீரராக 22 ஆண்டுகள் விளையாடியவர் ஜெயசூர்யா. டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் விளையாடி இருக்கும் இவர் இலங்கை அணிக்காக 586 சர்வதேச போட்டிகள் விளையாடி 21,032 ரன்கள் குவித்துள்ளார். பந்து வீச்சிலும் அபாரமாக செயல்பட்டிருக்கும் இவர் 440 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இலங்கை அணிக்காக 1989இல் ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார் ஜெயசூர்யா. இதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்துதான் டெஸ்ட் அணியில் அவருக்கு இடம் கிடைத்தது.
ஓபனிங் பேட்ஸ்மேனான ஜெயசூர்யா - மற்றொரு ஓபனரான ரோமேஷ் கலுவித்ரனாவுடன் இணைந்து ஒரு நாள் போட்டிகளில் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைந்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுப்பார்கள். ஒரு நாள் போட்டிகள் அறிமுகமான புதிதில் முதல் 15 ஓவர்களுக்கு இரண்டு பீல்டர்கள் மட்டுமே 30 யார்டு வட்டத்துக்கு வெளியே இருப்பார்கள். இதை சாதகமாக்கி கொள்ளும் விதமாக ஆரம்பத்திலேயே அதிரடியாக ரன்கள் குவிக்கும் பார்முலாவை ஜெயசூர்யா - கலுவித்ரனா ஜோடிதான் உலகுக்கு அறிமுகப்படுத்தியது எனலாம்.
பின்னாளில் இதை பிற அணிகளும் பின்பற்ற, ஒரு நாள் போட்டிகள் என்பது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் மிகவும் சுவாரஸ்யமாக அமைய காரணமானது. தனது அதிரடியான பேட்டிங்கால் கவனம் ஈரத்த ஜெயசூர்யா அதிவேக அரைசதம் 17 பந்துகள், அதிகவேக சதம் 48 பந்துகள், அதிவேக 150 ரன்கள் 95 பந்துகள் என மூன்றையும் நிகழ்த்திய முதல் ஆளாக இருந்தார். எந்த அணியாக இருந்தாலும் ஜெயசூர்யா விக்கெட்டை முதலில் வீழ்த்த வேண்டும் என்பதே குறிக்கோளாக வைத்திருப்பார்கள். அவரை மட்டும் களத்தில் செட்டிலாகவிட்டால் அவ்வளவுதான், பவுலிங் செய்யும் அணியை ஆண்டவானாலும் காப்பாற்ற முடியாது என்று கூறும் விதமாக தாக்கத்தை ஏற்டுத்தி செல்வார் ஜெயசூர்யா.
பேட்டிங்கில் இப்படி என்றால், பவுலிங்கிலும் பேட்ஸ்மேன்களை கதிகலங்க செய்வதில் வல்லவராக இருந்தார். இடது கை ஸ்லோ ஆர்தோடாக்ஸ் பவுலரான இவர், அப்போதைய ரவீந்திர ஜடேஜா என்று கூறலாம். குறைவான ரன்அப்பில் மிகவும் ஸ்லோவாக பந்து வீசும் இவர், வலைவிரித்து பேட்ஸ்மேன்களை சிக்க வைப்பார்.
சச்சின், டிராவிட், லாரா உள்பட அந்த காலகட்டத்தில் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் எவரையும் விட்டு வைக்காமல் தனது பவுலிங்குக்கு இறையாக்கியுள்ளார். 1996 உலகக் கோப்பை காலிறுதி போட்டியில் நன்றாக பேட் செய்து வந்த இந்திய அணியில் சச்சின் விக்கெட்டை தூக்கி திருப்புமுனை ஏற்படுத்துவார். அவ்வளவுதான் அடுத்து இந்திய பேட்ஸ்மேன்கள் சீட்டுகட்டு போல் சரிந்து பெவிலயன் திரும்பியதை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்தப் போட்டியில் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார்.
ஒரு நாள் போல் டெஸ்டிலும் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கும் ஜெயசூர்யா, அதற்கு ஏற்ப நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்குவிப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்கு எதிராக 1997ஆம் ஆண்டில் கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பவுலர்களை சோதித்திருப்பார். இந்த போட்டியில் ரோஷன் மஹானமாவுடன் இணைந்து 576 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பார்ட்னர்ஷிப்பாக அமைந்த இந்த இன்னிங்ஸில் ஜெயசூர்யா மட்டும் 340 ரன்கள் எடுத்திருப்பார்.
டி20 போட்டிகளிலும் நல்ல பங்களிப்பை வெளிப்படுத்தியிருக்கும் இவர், 2007இல் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடர், 2009 டி20 உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்று கணிசமான ரன்களையும் குவித்துள்ளார்.
1999 முதல் 2003 வரை இலங்கை அணிக்கு 38 டெஸ்ட், 117 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு குழு தலைவராகவும் இருந்துள்ளார் ஜெயசூர்யா. இவர் தேர்வு செய்த அணி 2014 டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐபிஎல் கிரிக்கெட்டிலும் 2008 முதல் 2010 வரை மூன்று சீசன்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
1996 உலகக் கோப்பையை இலங்கை அணி வென்றது. அந்த தொடரில் இலங்கை அணியின் முக்கிய வீரராக ஜொலித்த இவர், மொத்தம் 221 ரன்களும், 7 விக்கெட்டுகளும் எடுத்தார். இலங்கை அணிக்காக அதிக சதமடித்த வீரர் (28 சதங்கள்), அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை பந்து வீச்சாளர் (323 விக்கெட்டுகள்), அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற இரண்டாவது வீரர் (58 விருதுகள்) போன்ற பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருந்து வரும் இவர் 2011இல் சர்வதேச கிரிக்கெட், அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
கிரிக்கெட் விளையாடும் அனைத்து அணிகளுக்கும் சிம்மசெப்பனமாக, குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக அசுரத்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரராகவும், எதிரணியனரை பேட்டிங் அல்லது பவுலிங் என சூரசம்ஹாரம் செய்யும் வீரராக இருந்து வந்த ஜெயசூர்யாவுக்கு இன்று 54வது பிறந்தநாள்.
டாபிக்ஸ்