Danushka Gunathilaka banned: அனைத்து வகை கிரிகெட்டிலிருந்தும் குணதிலாவுக்கு தடை
பாலியல் புகாரில் சிக்கி சிட்னி போலீசரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா, அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆல்ரவுண்டரான குணதிலகா, நவம்பர் 6ஆம் தேதி சிட்னி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதன்பின்னர் அவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் பெண் ஒருவரால் அளிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து குணதிலகா மீது பாலியல் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் மீதான வழக்கின் விசாரணை சிட்னி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், குணதிலகாவுக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்படுகிறார்.
தேசிய கிரிக்கெட் வீரரான குணதிலகா உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவதுடன், வேறு எந்த அணி தேர்வுக்கும் அவர் பெயர் பரிசீலனை செய்யப்படமாட்டார். அவர் மீதான இந்த குற்றச்சாட்டு எந்த வகையிலும் சகித்து கொள்ள முடியாது. விரைவில் விசாரணை நடத்தி முறையான நடவடிக்கை எடுக்கப்படும்"
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளாது.
முன்னதாக, இந்த விஷயம் தொடர்பாக ஐசிசியுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு ஒரு முழுமையான விசாரணை விரைவாக தொடங்கப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தது.
பிரபல டேட்டிங் செயலி மூலம் இளம்பெண் ஒருவரின் அறிமுகம் கிடைத்த குணதிலகா அவரை தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து கடந்த 2ஆம் தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் அந்தப் பெண்ணை சந்தித்து உள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணிடம் வலுக்கட்டாயமாக குணதிலகா பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரை தொடர்ந்து சிட்னி போலீசார் குணதிலகாவை கைது செய்தனர். பின்னர் குணதிலகாவை சுரி ஹில்ஸ் பகுதியில் உள்ள சிறையில் அடைத்தனர்.
இதன்பின்னர் குணதிலகா சிறையில் இருந்தவாறு இன்று டவுணிங் சென்டர் நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கவில்லை.
டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியில் விளையாடுவதற்காக தேர்வான குணதிலகா, முதல் சுற்று போட்டியின்போது காயமடைந்தார். அவருக்கு மாற்று வீரராக பண்டாரா என்பவர் அறிவிக்கப்பட்டார். காயம் அடைந்தாலும் ஆஸ்திரேலியாவிலேயே இருந்த அணி இலங்கை அணி பங்கேற்கும் போட்டிகளில் வீரர்களுக்கு உற்சாகம் அளித்து வந்தார். இதையடுத்து தற்போது பாலியல் புகார் வழக்கில் சிக்கி சிறையில் உள்ளார்.
இலங்கை அணிக்காக இதுவரை 8 டெஸ்ட், 47 ஒருநாள் மற்றும் 46 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் இரண்டு முறை சதமடித்துள்ளார். அதேபோல் மூன்று வகை போட்டிகளிலும் சேர்த்து 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டாபிக்ஸ்