Squash World Cup 2023: சென்னையில் ஸ்குவாஷ் உலகக் கோப்பைப் போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி
Squash World Cup: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசின் நல் ஆதரவுடன் இந்த உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் சிறப்புடன் நடைபெறுகிறது.
ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியை சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சர்வதேச ஸ்குவாஷ் போட்டி - 2023 சென்னை தொடக்கவிழா 12/06/2023 அன்று எக்ஸ்பிரஸ் அவென்யூ மைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த சர்வதேச ஸ்குவாஷ் போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது :-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் நல் ஆதரவுடன் இந்த உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் சிறப்புடன் நடைபெறுகிறது. இந்தப் போட்டியானது 12- ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நடத்தப்படுவது சிறப்புக்குரியது. இந்த போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
2023 ஸ்குவாஷ் உலகக் கோப்பையில் போட்டியை நடத்தும் இந்தியாவுடன் ஹாங்காங், சீனா, ஜப்பான், மலேசியா, எகிப்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கொலம்பியா ஆகிய எட்டு நாடுகளை சேர்ந்த தலைசிறந்த ஸ்குவாஷ் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்துள்ள வீரர்கள் அனைவரையும் வரவேற்பதிலும், சர்வதேச ஸ்குவாஷ் போட்டியை தொடங்கி வைப்பதிலும் மகிழ்ச்சியடைகிறேன் எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியில் பங்கேற்கின்ற வீரர்களின் அணிவகுப்பினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் வயலின் இசை மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த தொடக்கவிழாவில் உலக ஸ்குவாஷ் கூட்டமைப்பு தலைவர் ஜீனா வூல்ட்ரிட்ஜ் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு தலைவர், அனில் வாத்வா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, அரசு கூடுதல் தலைமை செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ, மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., தமிழ்நாடு ஸ்குவாஷ் இராக்கெட் அசோசியேசன் மற்றும் சாம்பியன் ஷிப் கமிட்டி சேர்மன் என். இராமச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு ஸ்குவாஷ் இராக்கெட் அசோசியேசன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
டாபிக்ஸ்