Squash World Cup 2023: வெற்றியுடன் தொடங்கிய இந்தியா - முதல் நாளில் டாப் அணிகள் ஆதிக்கம்
சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரின் முதல் நாளில் டாப் சீட் அணியான எகிப்து, முறையே மூன்றாவது மற்றும் நான்காவது சீட் அணியான ஜப்பான், மலேசியா அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இந்திய அணியும் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
நான்காவது ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டிகள் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடைபெறும் இந்த போட்டிகள் வரும் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, கொலம்பியா, மலேசியா, எகிப்து, ஜப்பான், ஹாங்காங், தென்ஆப்பரிக்கா ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஏ, பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளன.
அதன்படி ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, கொலம்பியா, எகிப்து, மலேசியா அணிகளும், பி பிரிவில் இந்தியா, ஹாங்காங், ஜப்பான், தென்ஆப்பரிக்கா அணிகளும் இடம்பிடித்துள்ளன.
லீக் சுற்று போட்டிகளில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை மோதிய பின்னர், டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி விளையாடும் வாய்பை பெறும்.
இதையடுத்து முதல் நாளில் பி பிரிவில் இடம்பிடித்த இந்தியா தனது முதல் போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் 72வது இடத்தில் உள்ள அபேய் சிங், ஹாங்காங்கின் ஷுங் யாட் லாங் என்கிற இளம் வீரரை எதிர்கொண்டார். அபேய் சிங் 7-2, 7-3, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
இவருக்கு அடுத்தபடியாக நட்சத்திர வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 7-1, 7-5,7-2 என்ற செட்களில் ஃபங் ஹெய்லி என்பவரை வீழ்த்தினார்.
மூன்றாவது வீரராக புள்ளிப்பட்டியலில் 17வது இடத்தை பிடித்திருக்கும் செளரவ் கோஷல் 5-7, 7-2, 7-5, 7-1 என்ற கணக்கில் ஆண்டஸ் லிங் என்பவரை போராடி தோற்கடித்தார்.
கடைசி ஆட்டத்தில் தன்வீ கன்னா 5-7, 6-7, 7-1, 7-4, 7-3 என்ற கணக்கில் தோபி சே என்பவரை வீழ்த்தினார். இதனால் இந்தியா தனது முதல் போட்டியில் 4-0 என்ற கணக்கில் ஹாங்காங் அணியை வென்றது.
மற்றொரு பி பிரிவு ஆட்டத்தில் ஜப்பான் அணி தென்ஆப்பரிக்காவை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.
ஏ பிரிவு ஆட்டத்தில் டாப் சீட் அணியான எகிப்து ஆஸ்திரேலியாவை 4-0 என்ற கணக்கிலும், மலேசியா 3-1 என்ற கணக்கில் கொலம்பியா அணியையும் தோற்கடித்தது.
இதைத்தொடர்ந்து முதல் நாளில் முன்னணி அணிகள் அனைத்தும் வெற்றியை பதிவு செய்து முத்திரை பதித்துள்ளன.