HT Sports SPL: WTC Final-க்கு தகுதி பெற இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்து வந்த பாதை!
World Test Championship Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பது டெஸ்ட் உலகக் கோப்பை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நாளை (ஜூன் 7) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் நியூசிலாந்து இந்த முறை பைனலுக்கு முன்னேறவில்லை.
இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பைனலில் லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் மோதுகிறது.
கடந்த முறை ரன்னர்-அப் ஆன இந்தியா இந்த முறை ஜெயிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது. அணியின் வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பது டெஸ்ட் உலகக் கோப்பை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. எனவே, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பது ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கு 2021 முதல் 2023 வரை நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற இரு அணிகள் தகுதி பெறும்.
இந்த கோதாவில் மொத்தம் 9 அணிகள் குதித்தன. ஆஸ்திரேலியா 19 போட்டிகளில் விளையாடி 11 வெற்றி, 3 தோல்வி, 5 டிரா என மொத்தம் 152 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அடுத்த இடத்தில் இந்திய அணி உள்ளது. இந்தியா 18 ஆட்டங்களில் விளையாடி 10 இல் வெற்றியும், 5இல் தோல்வியும் 3 இல் டிராவும் பெற்றுள்ளது. மொத்தம் 127 புள்ளிகளை பெற்றுள்ளது இந்தியா.
மூன்றாவது இடத்தில் 100 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா உள்ளது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளும், டிரா ஆனால் 4 புள்ளிகளும் வழங்கப்பட்டன.
கடந்த வந்த பாதை
2021-2023 வரை இந்திய டெஸ்ட் அணியின் பயணத்தைப் பார்ப்போம்.
2021 ஆகஸ்டில் இங்கிலாந்தும், இந்தியாவும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் 4 ஆட்டங்கள் 2021-லும், 2022 ஜூலையில் 5வது டெஸ்ட் ஆட்டமும் விளையாடப்பட்டது.
இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது. கடைசி டெஸ்டில் இங்கிலாந்து ஜெயித்தது. இதனால், 2-2 என தொடர் சமன் ஆனது.
இந்தத் தொடரில் 2 ஆட்டங்களில் ஜெயித்தன் மூலம் 24 புள்ளிகளை பெற்றது இந்தியா.
பின்னர், நியூசிலாந்துடனான தொடரில் முதல் ஆட்டம் டிராவான போதிலும், அடுத்த ஆட்டத்தில் அஸ்வின் சுழலால் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.
நியூசிலாந்துக்கு எதிரான இந்தத் தொடர் மூலம், இந்திய அணி 16 புள்ளிகளைப் பெற்றது.
தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா சரண்
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய இந்திய அணி, ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் வென்றது. எஞ்சிய 2 டெஸ்ட்களில் தோற்றது. இந்த தொடரில் இரு அணிகளின் பவுலர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.
தென்னாப்பிரிக்காவில் தொடரை இழந்தது இந்தியா. 12 புள்ளிகள் மட்டுமே இத்தொடரிலிருந்து கிடைக்கப் பெற்றது.
இலங்கையை ஊதித் தள்ளியது
இலங்கை அணியை இந்தியா ஊதித் தள்ளியது. கடந்த ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில், சொந்த மண்ணில் வெற்றி கொடி நாட்டியது இந்தியா. இதன்மூலம், 24 புள்ளிகளை பெற்றது.
ரிஷப் பண்ட் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். கடைசி டெஸ்டில் ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டநாயகன் விருது வென்றார்.
வங்கதேசத்தை சாய்த்த இந்தியா
வங்கதேசத்திற்கு கடந்த ஆண்டு இறுதியில் சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி, 2 டெஸ்டிலும் அபாரமாக விளையாடி ஜெயித்தது. இதன்மூலம், 24 புள்ளிகளை அள்ளியது இந்தியா.
இந்த ஆண்டு பிப்ரவரி-மார்ச்சில் ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம், 24 புள்ளிகளை எடுத்தது இந்தியா. ஒரு ஆட்டத்தில் ஆஸி., வென்றது. கடைசி ஆட்டம் டிரா ஆனது.
இருப்பினும், இந்தியாவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ரேசில் இலங்கையும் இருந்தது.
ஆனால், இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என்ற கணக்கில் ஜெயிக்க தவறியதால் இந்தியா பைனலுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்