HT Sports Special: ஒரு நாள் போட்டிகளில் அதிக மெய்டன் - தென் ஆப்பரிக்கா வென்ற ஒரே ஐசிசி தொடரின் அணியில் இடம்பிடித்தவர்
சிறந்த ஓபனிங் பவுலர், விளையாடி ஆட்டத்தை விட அதிக ஓவர்கள் மெய்டன் வீசிய பவுலர், தென்ஆப்பரிக்கா அணிக்காக பல முதல் சாதனைகளை புரிந்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காராக இருந்து வருகிறார் அந்த அணியில் முன்னாள் பவுலிங் ஆல்ரவுண்டர் ஷான் பொல்லாக்
தென் ஆப்பரிக்க கிரிக்கெட் அணியில் சிறந்த பவுலிங் ஆல்ரவுண்டராகவும், கேப்டனாக இருந்ததோடு, ஓபனிங் பவுலிங்கில் எதிரணி பேட்ஸ்மேன்களை தனது ஸ்விங் மற்றும் வேகம் கலந்த பவுலிங்கால் அச்சுறுத்தியவர் ஷான் பொல்லாக். ஆறு அடிக்கு மேல் உயரமும், கட்டுக்கோப்பான உடற்கட்டுடனும் தோற்றமளிக்கு பொல்லாக் தென் ஆப்பரிக்கா அணிக்காக டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஹான்சி குரோனி தலைமையிலான அணியில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், 1995இல் அறிமுகமானார் பொல்லாக். இதைத்தொடர்ந்து 1996இல் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும் அறிமுகமானார்.
தொடர்ந்து அணியின் முக்கிய பவுலராக உருவெடுத்தார் பொல்லாக். அந்த காலகட்டத்தில் அணியில் இடம்பிடித்திருந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஆலன் டொனால்டு - ஷான் பொல்லாக் ஆகியோர் சிறந்த ஓபனிங் பவுலிங் ஜோடியாக இருந்தனர். டெஸ்ட், ஒரு நாள் என இரண்டு வகை போட்டிகளிலும் ஆரம்பகட்ட ஓவர்களை பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தொடக்கத்திலேயே நெருக்கடி கொடுப்பார்கள்.
லோயர் ஆர்டரில் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படும் பொல்லாக் பல்வேறு போட்டிகளில் ரன் சேஸிங்குக்கு உதவியதோடு, நல்ல பினிஷிங்கும் கொடுத்துள்ளார்.
மினி உலகக் கோப்பை என்ற பெயரில் 1998ஆம் ஆண்டு ஐசிசி நாக்அவுட் கோப்பை தொடர் நடைபெற்றது. இதுதான் தென்ஆப்பரிக்கா அணி இதுநாள் வரை வென்றிருக்கும் ஒரே ஐசிசி தொடரின் கோப்பையாக உள்ளது.
ஹான்சி குரோனி தலைமையில் கோப்பை வென்ற இந்த அணியில் முக்கிய வீரராக இருந்தார் ஷான் பொல்லாக். இதன் பிறகு சூதாட்ட புகாரால் ஹான்சி குரோனிக்கு தடை விதிக்கப்பட, 2000ஆவது ஆண்டில் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார் ஷான் பொல்லாக்.
டெஸ்ட், ஒரு நாள் தொடர்களில் சிறப்பாக கேப்டன்சி செய்து வந்த பொல்லாக், 2003இல் சொந்த மண்ணில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை தொடரில் அடுத்து சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் தென்ஆப்பரிக்கா அணி வெளியேறியதால் கேப்டன்சி பதவியும் பறிபோனது.
ஆனாலும் தொடர்ந்து அணியில் நீடித்து வந்த பொல்லாக் தனது ஆட்டங்களில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தார். தென் ஆப்பரிக்காவுக்காக 400 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பவுலர் என்ற பெருமையை பெற்ற இவர், 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த எலைட் லிஸ்டிலும் இணைந்தார்.
சிறந்த எகானமியுடன் சிக்கனமான பவுலராக இருந்து வந்த பொல்லாக் ஒரு நாள் போட்டிகளில் அதிக மெய்டன்கள் வீசிய பவுலர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். 303 ஒரு நாள் போடட்டிகளில் விளையாடிருக்கும் பொல்லாக் 313 ஓவர்கள் மெய்டனாக வீசியுள்ளார். அதேபோல் ஒரு நாள் கிரிக்கெட்டில் மற்றொரு சாதனையாக சொந்த மண்ணில் 193 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராகவும் உள்ளார்.
அதேபோல் டெஸ்ட், ஒரு நாள் கிரிக்கெட்டில் 9வது பேட்ஸ்மேனாக களமிறங்கி சதமடித்த வீரராக உள்ளார். 2007ஆம் ஆண்டில் மோசமான பார்ம் காரணமாக முதல் முறையாக அணியில் இருந்து நீக்க்ப்பட்டார். இதைத்தொடர்ந்து மீண்டும் அணியில் சேர்க்கப்பட்ட போதிலும், 2008இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
தென்ஆப்பரிக்கா அணி தவிர ஆப்பரிக்க XI, உலக அணி XI அணிகளுக்காக விளையாடியிருக்கும் பொல்லாக் ஐபிஎல் போட்டிகளில் 2008 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.
108 டெஸ்ட் போட்டிகளில் 3000+ ரன்கள், 421 விக்கெட்டுகள், 303 ஒரு நாள் போட்டிகள் 3000+ ரன்கள், 393 விக்கெட்டுகள் என தென் ஆப்பரிக்கா அணிக்காக சிறந்த பங்களிப்பை அளித்த வீரராகவும், தற்போது வர்ணனையாளராகவும் இருந்து வரும் பொல்லாக் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்