TNPL Final: டிரம்ஸ் சிவமணி, அசல் கோளாறு நிகழ்ச்சிகள்.. களைகட்ட காத்திருக்கும் டி.என்.பி.எல் 2023 நிறைவு விழா
மாலை 6.25 மணிக்கு பிரபல ராப் பாடகர் அசல் கோளாறு மற்றும் ராக் டான்ஸ் குழுவினரின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறும்.
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸன் திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளையுடன் நிறைவடைகிறது. இந்த பிரம்மாண்ட நிகழ்வை மேலும் கோலாகலமாக கொண்டாட பல சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நாளைய நிறைவு விழா நடைபெறவுள்ளது.
பிரம்மாண்டமாக நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு முன்பாக, திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மாலை 6 மணிக்கு, ஐசிசி முன்னாள் தலைவரான என்.ஸ்ரீனிவாசன் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற பேட்ஸ்மேன் சந்தீப் பாட்டில் இவர்களின் முன்னிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் இணைந்து தங்களின் பங்களிப்புகளை செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், போட்டி நடுவர்கள் மற்றும் ஆடுகள பராமரிப்பாளர்களுக்கான ஒரு முறை ஊதியப் பலனை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
டி.என்.பி.எல் 2023 சீஸனின் நிறைவு விழாவையொட்டி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்த வருடம் நமக்காக பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக, மாலை 6.25 மணிக்கு பிரபல ராப் பாடகர் அசல் கோளாறு மற்றும் ராக் டான்ஸ் குழுவினரின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின்னர், அரங்கில் கூடியிருக்கும் ரசிகர்களை மகிழ்விக்க X1X டான்ஸ் குழுவின் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவின் மிகச்சிறந்த டிரம்ஸ் கலைஞரான டிரம்ஸ் சிவமணியின் துள்ளலான இசை விருந்து நமக்காக காத்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சிகள் யாவும் நிறைவடைந்த பின்னர், லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் இடையேயான டி.என்.பி.எல் 2023 இறுதிப்போட்டி திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடர்ந்து நடைபெறும்.
முன்னதாக, டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் குவாலிஃபையர் 2 சுற்றில் நெல்லை அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல், அஜிதேஷ் 73 ரன்கள் விளாசினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்