HBD Sandeep Singh: ஹாக்கியில் இளம் வீரர்களுக்கு ரோல் மாடல்.. drag flick shot ஸ்பெஷலிஸ்ட் சந்தீப் சிங் பிறந்த நாள் இன்று
கிடைத்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி 2006-ஆம் ஆண்டில் போலந்தில் நடைபெற்ற ஹாக்கித் தொடரில் அதிக கோல்களைப் பதிவு செய்து நாடறியும் வீரராக உருமாறுகிறார் சந்தீப் சிங்.
ஹரியாணா மாநிலம், ஷான்பாத் நகரில் கடந்த 1986-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி நடுத்தர குடும்பத்தில் பிறந்தார் சந்தீப் சிங். இவரின் பெற்றோர் குருசரண் சிங் பிந்தர், தல்ஜீத் கெளர் பிந்தர். சந்தீப் சிங்கின் மூத்த சகோதரர் விக்ரம்ஜீத் சிங். இவரும் ஹாக்கி வீரர்தான்.
இளம் வயதில் சந்தீப்பும், அவரது சகோதரரும் பயிற்சியாளர் கர்தார் சிங்கிடம் ஹாக்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
பயிற்சியாளர் மிகவும் கண்டிப்பானவர். அவரது தண்டனைகளால் மனம் தளர்ந்துபோகும் சந்தீப், ஹாக்கி பயிற்சியைத் தொடர மனமில்லாமல் விட்டுவிடுகிறார்.
அதே நேரம் அவரது சகோதரர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆண்டுகள் உருண்டோடி விடுகின்றன.
இளம் வயது முதல், வயல்வெளியில் உணவு தானியங்களைப் பறவைகள் கொத்தித் தின்றுவிடாமல் தடுப்பதற்காகக் கற்களை எறிந்து விரட்டும் பணியில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருப்பார் சந்தீப் சிங்.
கையால் எறிவதைக் காட்டிலும் ஒரு மட்டையை வைத்துக் கொண்டு சிறிய கற்களை வயல்வெளி மீது அடித்து பறவைகளை விரட்டிவிடுவார்.
ஒரு சூழ்நிலையில், சகோதரர் விக்ரம்ஜீத் சிங்குக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போகவே சோர்வடைந்து வயல் வெளிக்கு வருவார். அப்போது, சந்தீப் சிங் பறவைகளை விரட்டுவதை பார்த்துவிட்டு, அவர் அடிக்கும் ஷாட் ஹாக்கியில் கோல் போடுவதற்குப் பயன்படுத்தப்படும் ‘flicker shot’ என்பதை அறிந்து வியப்பில் ஆழ்ந்துவிடுவார்.
‘நீ சிறப்பாக விளையாடுகிறாய். drag flick shot-ஐ அடிப்பது எளிதானதல்ல. அது உனக்கு மிக அழகாக வருகிறது. இந்திய அணியில் உனக்கு நிச்சயம் இடம் கிடைக்கும். நீ ஹாக்கி வீரராகவே பிறந்தவன்’ என்று நம்பிக்கை அளித்து தேசிய அணியின் பயிற்சியாளரிடம் வாய்ப்பு கேட்க அழைத்துச் செல்கிறார் அவரது சகோதரர்.
அங்கு இவர் அடிக்கும் drag flick shot-ஐ பார்த்து பயிற்சியில் சேர்த்துக் கொண்டார் தலைமைப் பயிற்சியாளர்.
இந்தச் சூழ்நிலையில், ஷான்பாத் பயிற்சி மையத்தில் வீராங்கனை ஒருவரைக் கண்டு காதலில் விழும் சந்தீப், அவருக்காக அதே பயிற்சி மையத்தில் அதே பயிற்சியாளர் அளிக்கும் பனிஷ்மென்ட்களை நிறைவேற்றிக் கொண்டே ஹாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது காதலுக்கும் பெண் வீட்டாரிடம் இருந்து எதிர்ப்பு வருகிறது. ‘நீ முதலில் சாதித்துவிட்டு வா. பின்னர் பார்க்கலாம்’ என்று பெண்ணின் சகோதரர் சவால்விட, சந்தீப் சிங் காதலில் ஜெயிப்பதற்காக தீவிரப் பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். காதலே அவரை அதிகம் இயக்கும். இரவு-பகல் பாராமல் பயிற்சியில் ஈடுபடும் சந்தீப் சிங்குக்கு இந்திய அணியில் வாய்ப்பும் கிடைக்கும்.
கிடைத்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி 2006-ஆம் ஆண்டில் போலந்தில் நடைபெற்ற ஹாக்கித் தொடரில் அதிக கோல்களைப் பதிவு செய்து நாடறியும் வீரராக உருமாறுகிறார் சந்தீப். அவருக்கு அரசு வேலையும் கிடைக்க காதலியைத் தேடிச் செல்வார். ஆனால், இவரது காதலுக்குத் தொடர்ந்து பெண் வீட்டில் எதிர்ப்பு இருக்கும். அந்தப் பெண்ணுக்குப் பிடித்திருந்தாலும் அவரும் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் வீராங்கனை என்பதால் தாய்நாட்டுக்காக விளையாடுவதற்காக அதிக முனைப்பு காட்டி வருவார். அதே ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில் பங்கேற்பதற்காக ரயிலில் சந்தீப் சிங் செல்லும்போதுதான் அந்த சோக நிகழ்வு அரங்கேறுகிறது.
ரயிலில் எதிர்பாராதவிதமாக அவரது இருக்கைக்கு பின்புறம் அமர்ந்துகொண்டிருந்த காவலர் துப்பாக்கியைத் துடைத்துக் கொண்டிருந்தபோது தவறுதலாக சந்தீப் சிங்கின் இடுப்புப் பகுதியில் சுட்டுவிடுவார். ரத்த வெள்ளத்தில் ரயிலில் சரிந்துவிழும் சந்தீப் சிங், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்படுகிறார். இருப்பினும், இடுப்புக்குக் கீழே அவருக்கு இயக்கம் இல்லாமல் போய்விடுகிறது. உடைந்து அழுகிறார். அவரது சகோதரரும், தாய், தந்தையும் பக்கபலமாக இருக்கிறார்கள். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்.
காதலித்த பெண்ணோ ஒரே ஒரு முறை மட்டும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு சென்றுவிடுகிறார். இதனால்,மிகவும் உடைந்துபோகும் சந்தீப் சிங்கை அவரது சகோதரர் விக்ரம்ஜீத் தேற்றுகிறார்.
2007-இல் இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் உதவியுடன் நெதர்லாந்துக்கு மேல்சிகிச்சைக்காக செல்லும் சந்தீப், பழைய உடல் தகுதியை மீட்டெடுத்து தாய்நாட்டுக்குத் திரும்புகிறார். பயிற்சியே இல்லாமல் இருந்த சந்தீப் சிங்குக்கு விக்ரம்ஜீத் சிங் பயிற்சி அளித்து மீண்டும் புதிய வீரராக உருவாக்குகிறார்.
இந்த முறை காதலிக்காக அல்ல; நாட்டுக்காக விளையாடப்போவதாக அறிவித்து அணியில் களம் இறங்கும் சந்தீப் சிங் அதன்பிறகு பல சாதனைகளைப் படைக்கிறார்.
2009-இல் லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிக கோல்களைப் பதிவு செய்து வெற்றிக்கு வித்திடுகிறார் அணியின் கேப்டன் சந்தீப் சிங்.
அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரிடம் 2010-ஆம் ஆண்டு அர்ஜுனா விருது பெற்றார்.
ஒரு விபத்திலிருந்து மீண்டு வந்து தாய்நாட்டுக்காக ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்து சாதனை படைத்து ‘Flicker singh’ என்று கொண்டாட்டப்பட்ட சந்தீப் சிங் என்ற நிஜ மாவீரரின் கதையை அறிந்துகொள்ள சூர்மா என்ற படத்தை சினிமா ஆர்வலர்களும், விளையாட்டு ரசிகர்களும் அவசியம் பார்க்க வேண்டும்.
சூர்மா என்றால் மாவீரன் என்று அர்த்தம். சந்தீப் சிங்கின் வாழ்க்கைக் கதையைப் படமாக்கும் அளவுக்கு திரையுலகம் முன்வந்திருக்கிறது என்றால், இவர் செய்த சாதனைகளும், இவரது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களும் எவ்வளவு சுவாரசியமாகவும், சவால் நிறைந்ததாகவும் இருந்திருக்கக் கூடும் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அது உண்மைதான் என்பது இந்தப் படத்தை பார்த்தால் நமக்கு புரியும். ஒரு படத்தின் பிரதான கதாபாத்திரம் எதாவது ஒரு இலக்கை வைத்திருக்கும். அந்த இலக்கை நிறைவேற்ற பல சவால்களை அந்தப் பாத்திரம் கடந்து செல்ல வேண்டியதிருக்கும். இவையெல்லாம் ஹாக்கி வீரர் சந்தீப் சிங்கின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.
இந்தப் படத்தை நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் காணலாம். 2004-ஆம் ஆண்டில் மலேசியாவில் நடைபெற்ற சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் அறிமுகமானார் சந்தீப் சிங்.
150 கி.மீ. வேகத்தில் drag flick ஷாட் மூலம் கோல் பதிவு செய்த வீரரும் இவரே. இன்று பிறந்த நாள் கொண்டாடும் சந்தீப் சிங்கை வாழ்த்துவோம்!
டாபிக்ஸ்