Rishabh Pant: இதுதான் எனது இரண்டாவது பிறந்தநாள் - மறுபிறவி நாளை குறிப்பிட்டு ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்த ரிஷப் பண்ட்
விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த நாளை பதிவிட்டு தனது இரண்டாவது பிறந்தநாள் என இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், மேட்ச் வின்னராகவும் இருப்பர் ரிஷப் பண்ட். டெஸ்ட், ஒரு நாள், டி20 என எந்த வகை போட்டியாக இருந்தாலும் தனது அதிரடி ஆட்டத்தால் எதிரணியினரை கலங்க வைக்கும் பேட்ஸ்மேனாகவே இருந்துள்ளார்.
இதையடுத்து ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தார். இந்த விபத்தில் கால், மூட்டு, முதுகு பகுதிகளில் பலத்த காயமடைந்த பண்ட், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மெல்ல தேறி வருகிறார்.
ஆரம்பத்தில் நிற்பதிலும், நடப்பதிலும் சிரமம் அடைந்த ரிஷப் பண்ட், பின்னர் ஊன்றுகோல் துணையுடன் மெல்ல நடக்க தொடங்கினார். தற்போது எந்த உதவியும் இல்லாமல் நடப்பதுடன், நடைபயிற்சியிலும் தவறாமல் ஈடுபட்டு வருகிறார்.
தனது உடல்நிலை தேறி வருவது தொடர்பாக அவ்வப்போது இன்ஸ்டாவில் விடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். ரிஷப் பண்ட் விடியோவுக்கு ரசிகர்களும் பயர், ஹார்ட் எமோஜிக்களை பகிர்ந்து விரைவில் முழுமையாக குணமடைந்து முழு உடற்தகுதி பெற வேண்டும் என கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து வரும் பண்ட், அங்கு பயிற்சியும், புத்துணர்வு முகாமிலும் பங்கேற்று வருகிறார்.
இதையடுத்து ரிஷப் பண்ட், தனது இன்ஸ்டாவில் உண்மையான பிறந்தநாளை மாற்றி ஜனவரி 5, 2023 என குறிப்பிட்டுள்ளார். இதில் தனது இரண்டாவது பிறந்தநாள் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இதன்மூலம் விபத்துக்கு பிறகான தனது பிறவியை குறிக்கும் விதமாக அவர் இப்படி மாற்றியிருக்கலாம் என தெரிகிறது.
ரிஷப் பண்ட் உண்மையான பிறந்தநாள் அக்டோபர் 4, 1997 ஆகும். ஆனால் விபத்துக்கு பிறகு உயிர் பிழைத்திருக்கும் அவர் தற்போது 2023இல் புதிததாக பிறந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் நெகிழ்ச்சியான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்திய அணிக்காக 33 டெஸ்ட், 30 ஒரு நாள், 66 டி20 போட்டிகள் என மொத்தம் 129 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார் ரிஷப் பண்ட். இவர் அடுத்து ஆண்டு ஜனவரிக்குள் முழு உடற்தகுதி பெற்ற மீண்டும் கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்