PKL 2024: பழிக்கு பழி படலம்..! தொடர்ச்சியாக 4 வெற்றிகள் - ப்ளே ஆஃப் வாய்ப்பை எட்டி பிடிக்கும் தமிழ் தலைவாஸ்
பழிக்கு பழி படலமாக முதல் பாதியில் தோல்வியுற்ற அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி நான்கு தொடர் வெற்றிகளை பெற்றிருக்கும் தமிழ் தலைவாஸ் புள்ளிப்பட்டியலிலும் விர்ரென முன்னேறியுள்ளது.
ப்ரோ கபடி லீக் 2024 தொடர் பாட்னாவில் இருக்கும் பாட்லிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தொடரின் 94வது போட்டியில் தமிழ் தலைவாஸ் - யு மும்பா அணிகள் மோதின. பாட்னாவில் தனது முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் களமிறங்கியது. ஏற்கனவே ஹாட்ரிக் வெற்றி பெற்று நல்ல பார்மில் இருந்து வரும் தமிழ் தலைவாஸ் வீரர்கள் இந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆட்டத்தின் முதல் பாதி ரெயிட், டேக்கிள் என முன்னிலை வகித்தது தமிழ் தலைவாஸ். இரண்டாம் பாதியில் கம்பேக் கொடுத்த யு மும்பா ரெயிடில் முன்னிலை பெற்றாலும், டேக்கிளில் பின் தங்கியது. இரண்டு பாதியிலும் தமிழ் தலைவாஸ் அதிக புள்ளிகளை பெற்று முன்னிலை வகித்தது.
போட்டி முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய தமிழ் தலைவாஸ், முழு ஆட்ட நேர முடிவில் 50-34 என்ற புள்ளிக் கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது. தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் 50 புள்ளிகளை பெற்ற தமிழ் தலைவாஸ், கடைசியாக வென்ற 4 போட்டிகளிலும் 15 புள்ளிகள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 23 ரெயிட், 24 டேக்கிள், 6 ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. அத்துடன் ஒரு சூப்பர் ரெயிட் புள்ளிகளையும் பெற்றது. ரெயிட், டேக்கிள் என இரண்டிலும் தமிழ் தலைவாஸ் சிறப்பாக செயல்பட்டது.
யு மும்பா அணி 24 ரெயிட், 8 டேக்கிள் ஒரு ஆல்அவுட் புள்ளிகளை பெற்றது. எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெறவில்லை. ஒரு சூப்பர் ரெயிட் புள்ளிகளை பெற்றது.
தமிழ் தலைவாஸ் ரெயிடர் நரேந்தர் கோஷியார் 9 ரெயிட், 2 டேக்கிள், 2 போன்ஸ் புள்ளிகள் என மொத்தம் 13 புள்ளிகளை பெற்றார். அதே போல் யு மும்பா வீரர் குமான் சிங் 10 ரெயிட், ஒரு டேக்கிள், 2 போனஸ் என 13 புள்ளிகள் பெற்றார். இவர்கள் இருவரும் இந்த போட்டியில் டாப் வீரர்களாக உள்ளார்கள்.
ப்ரோ கபடி லீக் 2024 இரண்டாம் பாதியில் அற்புதமாக விளையாடி வரும் தமிழ் தலைவாஸ் அணி, தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது. சீசனின் முதல் பாதி ஆட்டத்தில் தோல்வியுற்ற அணிகளுக்கு எதிராக இரண்டாவது மோதலில் வெற்றியை பெற்று வருகிறது.
அந்த வகையில் யு மும்பா அணிக்கு எதிராக கடந்த டிசம்பரில் நடைபெற்ற போட்டியில் 33-46 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து யு மும்பா அணிக்கு எதிராக இரண்டாவது மோதலில் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதல் பாதியில் 2 வெற்றிகளை மட்டும் பெற்றது தமிழ் தலைவாஸ். இதையடுத்து இரண்டாம் பாதியில் கம்பேக் கொடுத்து சிறப்பாக விளையாடி வருகிறது. தற்போது 16 போட்டிகளில் 7 வெற்றி, 40 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
டாப் 6 இடங்களில் இருக்கும் அணி ப்ளேஆஃப் போட்டிகளுக்கு தகுதி பெறும். அதன்படி தற்போது 7வது இடத்தில் இருக்கும் தமிழ் தலைவாஸ் இந்த பார்மை தொடர்ந்து எஞ்சியிருக்கும் போட்டிகளிலும் தொடர் வெற்றியை பெற்றால் ப்ளேஆஃப் வாய்ப்பை எட்டிபிடித்து விடலாம்.
தமிழ் தலைவாஸ் தனது அடுத்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நாளை நடைபெறுகிறது.
டாபிக்ஸ்