PKL 2024: சூடு குறையாத ஜெய்ப்பூர், புனேரி பல்தான் அணிகள் - தொடரும் வெற்றி பயணம்
டாப் இரண்டு இடங்களில் இருந்து வரும் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், புனேரி பல்தான் ஆகிய இரு அணிகளும் பார்மை இழக்காமல் டாப் கியரில் இருந்து வருவதோடு, வெற்றி பயணத்தையும் நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறது

ப்ரோ கபடி லீக் 2024 தொடர் ஹரியானா மாநிலம் பஞ்சகுலாவிலுள்ள தௌ தேவி லால் ஹுடா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் 128வது போட்டி குஜராத் ஜெயிண்ட்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இரு அணிகளும் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிக்கும் நிலையில், சம்பிரதாய ஆட்டமாகவே நடந்தது.
இந்த போட்டியின் முதல் பாதியில், ஜெய்ப்பூர் அணி ஆதிக்கம் செலுத்தியது. ரெயிட், டேக்கிள் ஆட்டத்தில் முன்னிலை புள்ளிகளை பெற்றது. இரண்டாம் பாதியை தன் வசமாக்கி கொண்ட குஜராத் ரெயிட், டேக்கிள் ஆட்ட புள்ளிகளில் முன்னேறியது. முழு ஆட்ட நேர முடிவில் 45-36 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 24 ரெயிட், 14 டேக்கிள், 6 ஆல்அவுட், 1 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளியை பெற்வில்லை. குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 23 ரெயிட், 10 டேக்கிள், 2 ஆல்ஆவுட், 1 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. அத்துடன் 2 சூப்பர் ரெயிட் புள்ளிகளையும் பெற்றது.
