PKL 2024: ஹரியானாவுக்கு டபுள் வெற்றி - மூன்று தொடர் தோல்வியால் துவண்டு போயிருக்கும் பெங்கால் வாரியர்ஸ்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Pkl 2024: ஹரியானாவுக்கு டபுள் வெற்றி - மூன்று தொடர் தோல்வியால் துவண்டு போயிருக்கும் பெங்கால் வாரியர்ஸ்

PKL 2024: ஹரியானாவுக்கு டபுள் வெற்றி - மூன்று தொடர் தோல்வியால் துவண்டு போயிருக்கும் பெங்கால் வாரியர்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 30, 2024 04:00 AM IST

தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்திருக்கும் பெங்கால் வாரியர்ஸ் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை கடினமாக்கியுள்ளது.

ஹரியானா ஸ்டீலர்ஸ் வீரர் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் பெங்கால் வாரியர்ஸ் வீரர்
ஹரியானா ஸ்டீலர்ஸ் வீரர் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் பெங்கால் வாரியர்ஸ் வீரர்

ஏற்கனவே தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை பெற்ற பெங்கால் வாரியர்ஸ் இன்று வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் ரேஸில் தனது இருப்பை நிலையாக வைத்துக்கொள்ள முடியும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது. ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் தனது கடைசி போட்டியில் தோல்வியடைந்து இருந்ததால் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தது.

ஆட்டத்தின் முதல் பாதி ரெயிட், டேக்கிள் என பெங்கால் வாரியர்ஸ் முன்னிலை வகித்தது. ஹரியானாவை விட அதிக புள்ளிகளையும் பெற்றிருந்தது. இரண்டாம் பாதியில் வெகுண்டெழுந்த ஹரியானா சிறப்பாக செயல்பட்டு புள்ளிகளை அள்ளியது. இரண்டாம் பாதி ரெயிடில் இரு அணிகளும் சமநிலை பெற்றிருந்தாலும், டேக்கிளில் முன்னிலை பெற்றது ஹரியானா.

போட்டி முதல் பாதி பெங்கால் வசமும், இரண்டாம் பாதி ஹரியானா வசமும் இருந்தது. முழு ஆட்ட நேர முடிவில் 41-36 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது ஹரியானா ஸ்டீலர்ஸ். இந்த சீசனில் பெங்கால் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் ஹரியானா வெற்றியடைந்துள்ளது. இரு அணிகள் மோதிக்கொண்ட முதல் போட்டியில் 41-35 புள்ளிக் கணக்கில் ஹரியானா வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 28 ரெயிட், 8 டேக்கிள், 4 ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகளை பெறவில்லை.

பெங்கால் வாரிர்ஸ் அணி 29 ரெயிட், 5 டேக்கிள், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. ஆல்அவுட் புள்ளிகளை பெறவில்லை. ஒரேயொரு சூப்பர் ரெயிட் புள்ளிகளை பெற்றது. இன்றைய ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் ரெயிடில் சிறப்பாகவே செயல்பட்டனர்.

பெங்கால் வாரியர்ஸ் வீரர் மணிந்தர் சிங் 7 ரெயிட், 2 போன்ஸ் புள்ளிகள் என மொத்தம் 13 புள்ளிகளை பெற்றார். அதே போல் ஹரியானா அணியில் ஷிவம் படாரே 7 ரெயிட், ஒரு டேக்கிள், 4 போனஸ் என 12 புள்ளிகள் பெற்றார்.

ப்ரோ கபடி லீக் 2024 முதல் பாதியில் சிறப்பாக செயல்பட்ட பெங்கால் வாரியர்ஸ், தற்போது இரண்டாவது பாதியில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை தழுவியுள்ளது. தற்போது 16 போட்டிகளில் 6 வெற்றியை பெற்றிருக்கும் பெங்கால் வாரியர்ஸ், 39 புள்ளிகளுடன் 10வது இடத்துக்கு சென்றுள்ளது.

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 16 போட்டிகளில் 9 வெற்றிகளை பெற்று, 50 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. தற்போதைய நிலையில் ஹரியானா அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பானது சற்று பிரகாசமாகவே உள்ளது. பெங்கால் வாரியர்ஸ் அணியை பொறுத்தவரை இனி வரும் போட்டிகளில் கட்டாயமாக வென்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க முடியும் நிலையில் உள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் புனேரி பல்தான் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று ஒரேயொரு போட்டி மட்டுமே நடைபெறுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.