Paris Olympics: வில்வித்தை விளையாட்டில் ஒலிம்பிக் பதக்க வறட்சி..முழு பலத்துடன் களமிறங்கும் இந்தியா வில்வித்தை வீரர்கள்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Paris Olympics: வில்வித்தை விளையாட்டில் ஒலிம்பிக் பதக்க வறட்சி..முழு பலத்துடன் களமிறங்கும் இந்தியா வில்வித்தை வீரர்கள்

Paris Olympics: வில்வித்தை விளையாட்டில் ஒலிம்பிக் பதக்க வறட்சி..முழு பலத்துடன் களமிறங்கும் இந்தியா வில்வித்தை வீரர்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 25, 2024 08:00 AM IST

2012 லண்டன் ஒலிம்பிக்கு பிறகு, தற்போது நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முழு வலிமை கொண்ட வில்வித்தை அணியுடன் களமிறங்குகிறது. ஒலிம்பிக் பதக்க வறட்சியை போக்கும் விதமாக முழு பலத்துடன் இந்தியா வில்வித்தை வீரர்கள் சாதிக்க தயாராக இருக்கிறார்கள்.

வில்வித்தை விளையாட்டில் ஒலிம்பிக் பதக்க வறட்சி போக்க முழு பலத்துடன் களமிறங்கும் இந்தியா வில்வித்தை வீரர்கள்
வில்வித்தை விளையாட்டில் ஒலிம்பிக் பதக்க வறட்சி போக்க முழு பலத்துடன் களமிறங்கும் இந்தியா வில்வித்தை வீரர்கள் (REUTERS)

2012 லண்டன் ஒலிம்பிக்கு பிறகு, தற்போது நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா முழு வலிமை கொண்ட வில்வித்தை அணியுடன் களமிறங்குகிறது. ஒலிம்பிக் பதக்க வறட்சி போக்கும் விதமாக முழு பலத்துடன் இந்தியா வில்வித்தை வீரர்கள் சாதிக்க தயாராக இருக்கிறார்கள்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழா வரும் சனிக்கிழமை நடக்கவுள்ளது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்னதாகவே இந்திய வில்வீரர்கள் ஆரம்பகட்ட போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இந்திய வில்வித்தை விளையாட்டு நட்சத்திரங்களாக இருக்கும் தீபிகா குமாரி, அங்கிதா பகத், பஜன் கெளர், பிரவின் ஜாதவ், தருண்தீப் ராய் மற்றும் தீரஜ் பொம்மதேவாரா ஆகியோர் பெண்கள் மற்றும் ஆண்கள் தனிநபர் தரவரிசை சுற்றுகளில் வெள்ளிக்கிழமை களமிறங்க இருக்கிறார்கள்.

வில்வித்தை விளையாட்டு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 4 வரை பாரிஸ் ஒலிம்பிக்கில் நடைபெறுகிறது. முதலில் வெள்ளிக்கிழமையன்று தரவரிசைச் சுற்றுகள், அதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மகளிர் அணி போட்டி, திங்கள்கிழமை ஆண்கள் அணி போட்டியும் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து ஜூலை 30, 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனிநபர் நாக் அவுட் சுற்றுகள் நடைபெறும். பின்னர் கலப்பு குழு போட்டிகள் ஆகஸ்ட் 2ஆம் தேதியும், அதைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் ஆடவர்களுக்கான பதக்கப் போட்டிகள் அடுத்த இரண்டு நாள்களில் நடைபெற உள்ளன.

ஆரம்ப கட்ட போட்டிகளில் களமிறங்கும் இந்திய வில்வீரர்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்

தீபிகா குமாரி

30 வயதான தீபிகா குமாரி ஒலிம்பிக்கில் நான்காவது முறையாக பங்கேற்கிறார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இருந்து இந்திய வில்வித்தை அணிகளில் தொடர்ந்து இடம்பிடித்துள்ளார். தீபிகா 2022 இன் பிற்பகுதியிலும் 2023இன் தொடக்கத்திலும் தாயானார். அப்போது குறுகிய காலம் ஓய்வில் இருந்தார்.

ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதற்கான நேரம் முடியும் சம்யத்தில், தனது திறமையை வெளிக்காட்டி கம்பேக் கொடுத்த இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளார். இந்த ஆண்டு ஏப்ரலில் ஷங்காயில் நடந்த உலகக் கோப்பை ஸ்டேஜ்-1ல், குழந்தை பெற்றெடுத்து 16 மாதங்களுக்குள் வெள்ளி வென்றார். இது தீபிகா குமாரியின் அசாதாரணமான மறுபிரவேசம் அமைந்தது

தருண்தீப் ராய்

தீபிகாவைப் போலவே தருண்தீப்பும் நான்காவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். இந்த ஒலிம்பிக்ஸ் "இப்போது அல்லது எப்போதும் இல்லாத சூழ்நிலை" என்று 40 வயதான அவர் களமிறங்கியுள்ளார்.

தருண்தீப் உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டு வெள்ளி (2005, 2019), ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் உட்பட ஒன்பது உலகக் கோப்பைப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

அவரது பதக்க பட்டியலில் ஒலிம்பிக் பதக்கம் மட்டுமே இல்லாமல் உள்ளது. சிக்கிம் வீரரான இவர், 2004 ஏதென்ஸ், 2012 லண்டன் மற்றும் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணிகளில் ஒரு பகுதியாக இருந்தார்.

ஏதென்ஸில் நடந்த தனிநபர் போட்டியில் முதல் சுற்றிலும், 2012 மற்றும் 2021 பதிப்புகளிலும் இரண்டாவது சுற்றிலும் வெளியேறினார். டோக்கியோவில் நடந்த ஆடவர் குழு போட்டியில் காலிறுதிக்கு முன்னேறினார்.

பிரவின் ஜாதவ்

தீபிகா மற்றும் தருண் தீப்பைத் தவிர, டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடிய இந்திய வில்வித்தை வீரர்களில் ஒருவர் ஜாதவ். ஒலிம்பிக்கில் அதிக அனுபவம் பெற்றவர். ஜாதவ் தரவரிசைச் சுற்றில் மூத்த வில்வீரர்களான அதானு தாஸ் மற்றும் தருண்தீப் ஆகியோரை விட முன்னேற்றம் பெற்றார்.

ஜாதவ் பின்னர் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார். 2024 ஷாங்காயில் நடந்த வில்வித்தை உலகக் கோப்பையில் தங்கம் வென்ற தீரஜ் பொம்மதேவரா, தருண்தீப் ஆகியோர் இருந்த அணிகளில் ஒருவராக திகழ்ந்தார். 14 ஆண்டுகளில் ஆடவர் ரிகர்வ் அணி வில்வித்தையில் இந்தியா வென்ற முதல் உலகக் கோப்பை தங்கப் பதக்கம் இதுவாகும்.

தீரஜ் பொம்மதேவரா

22 வயதான தீரஜ் பொம்மதேவரா, பாரிஸில் ஒலிம்பிக் விளையாட்டில் அறிமுக வீரராக களமிறங்குமாகிறார். பொம்மதேவரா 2017இல் சர்வதேச அரங்கில் அறிமுகமானார் மற்றும் 2021 இல் உலக ஆர்ச்சர் யூத் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற ஆண்கள் அணியில் ஒருவராக இருந்தார். ஷாங்காயில் நடந்த உலகக் கோப்பையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்கப் பதக்க அணியிலும் பொம்மதேவரா இடம்பிடித்திருந்தார்.

அங்கிதா பகத்

பாரிஸில் ஒலிம்பிக்கில் அறிமுகமாகும் இந்திய அணியில் உள்ள மூன்று வில்வித்தை வீராங்கனைகளில் ஒருவரான 26 வயதான அங்கிதா பகத் உள்ளார. இவர் 2024ஆம் ஆண்டுக்கான இறுதி உலக வில்வித்தை ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் காலிறுதிக்கு தகுதி பெற்றார். அதேபோல் 2017 இளைஞர் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில் கலப்பு குழு நிகழ்வில் தங்கம் வென்றதன் மூலம் முக்கியத்துவம் பெற்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய மகளிர் அணியில் அங்கிதாவும் இடம்பெற்றிருந்தார்.

பஜன் கெளர்

18 வயதான பஜன் கெளர் கடந்த மாதம் துருக்கியின் அன்டலியாவில் நடந்த இறுதி ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் தங்கம் வென்று பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.

இதற்கு முன்பு 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற பெண்கள் அணியில் இடம்பெற்றிருந்தார், மேலும் 2023இல் நடந்த இளைஞர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.