BCCI: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க பாக்., செல்கிறதா இந்தியா?
Asia Cup Cricket: பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பி.சி.பி பிரதிநிதித் தலைவர் ஜாகா அஷ்ரப் ஆகியோர் டர்பனில் சந்தித்தனர்.
ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தான் செல்ல மாட்டோம் என்ற பிசிசிஐயின் அறிவித்துள்ள நிலையில், 2023 உலகக் கோப்பை இந்தியாவில் நடக்க இருப்பதால் அந்நாட்டு அணி இங்கு வருவதில் சந்தேகம் நீடிக்கிறது.
2023 ஐசிசி உலகக் கோப்பைக்காக இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியா செல்வது குறித்து முடிவு செய்ய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான உயர்மட்டக் குழுவை பாகிஸ்தான் அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், ஆசியக் கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் செல்ல மாட்டோம் என்று இந்தியா உறுதி செய்திருப்பது மோதலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஆசிய கோப்பையின் ஹைபிரிட் மாடலை உறுதிப்படுத்த வியாழக்கிழமை திட்டமிடப்பட்ட ஐ.சி.சி வாரியக் கூட்டத்திற்கு முன்னதாக பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பி.சி.பி பிரதிநிதித் தலைவர் ஜாகா அஷ்ரப் ஆகியோர் டர்பனில் சந்தித்தனர்.
பாகிஸ்தானுக்கு பயணம் செய்வது குறித்து இந்தியா தங்கள் ஆட்சேபனைகளை அறிவித்த பின்னர் பி.சி.பியின் அப்போதைய பிரதிநிதி தலைவர் நஜாம் சேத்தி ஹைபிரிட் (பொதுவான இடம்) மாடலை முன்மொழிந்தார்.
இந்த அட்டவணைக்கு மற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி) உறுப்பினர்களிடமிருந்து ஒப்புதல் கிடைத்தது. மேலும் இந்தியா தனது போட்டிகளை இலங்கையில் விளையாடும் என்றும் மற்ற போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (பி.சி.பி) தலைவராக ஜாகா அஷ்ரப் பொறுப்பேற்ற பிறகு, அவர் ஆசிய கோப்பையின் ஹைபிரிட் மாடல் அட்டவணைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இது போட்டியின் இடம் குறித்து புதிய சந்தேகங்களுக்கு வழிவகுத்தது. இருப்பினும், பி.சி.சி.ஐ மற்றும் பி.சி.பி ஆகியவை ஆசிய கோப்பைக்கு முன்மொழியப்பட்ட ஹைபிரிட் மாடலை முன்னெடுத்துச் செல்வதை ஐபிஎல் தலைவர் அருண் துமல் உறுதிப்படுத்தினார்.
2023 ஆசியக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் எங்கு நடைபெறும்?
2010-ம் ஆண்டைப் போலவே இலங்கையின் தம்புல்லா நகரில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளவே அதிக வாய்ப்பிருக்கிறது.
"பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பி.சி.பி தலைவர் ஜாகா அஷ்ரப்பை சந்தித்தார். ஆசிய கோப்பை அட்டவணை இறுதி செய்யப்பட்டது. இது முன்பு விவாதிக்கப்பட்டது போலவே நடந்து வருகிறது. பாகிஸ்தானில் நான்கு லீக் ஆட்டங்களும், அதைத் தொடர்ந்து இலங்கையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி உட்பட 9 ஆட்டங்களும், இரு அணிகளும் இறுதிப் போட்டியில் விளையாடினால் மூன்றாவது போட்டியும் நடைபெறும்" என்று துமல் கூறினார்.
இதனிடையே, பாகிஸ்தானும் ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா வராமல் தவிர்க்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
டாபிக்ஸ்