HTSports Spl: யுவராஜ் - கைஃப் காட்டிய ஷோ!வாழ்நாளில் மறக்க முடியாத கங்குலியின் டாப்லெஸ் Celebration!
விதை நான் போட்டது என செளரவ் கங்குலி மார்தட்டிக்கொள்வதற்கு அடிப்படை ஆதாரமாக இருந்த சம்பவங்களில் ஒன்றாக நாட்வெஸ்ட் தொடர் இறுதிப்போட்டி வெற்றியை கூறலாம்.
கிரிக்கெட் விளையாட்டின் மெக்கா என்று சொல்லப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்ற இந்திய ரசிகர்களால் என்றைக்கும் மறக்க முடியாத பொன்னான நிகழ்வாகவே உள்ளது.
2000ஆவது ஆண்டுக்கு முற்பகுதியில் இருநாடுகளுக்கு இடையிலான தொடர்களை காட்டிலும் முத்தரப்பு அல்லது பல நான்கு அணிகள் பங்கேற்கும் தொடர்களே அதிகமாக நடைபெறுவது வழக்கம். இதில் போட்டிபோடும் பிற நாடுகளை வீழ்த்தி வெற்றி பெறுவதென்பது சவால் நிறைந்ததாக இருப்பதோடு மட்டுமில்லாமல் சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வகையில் 2000ஆவது ஆண்டுக்கு பிற்பகுதியில் இருதரப்பு தொடர்கள் பிரபலமாகி வந்தபோது இந்தியா, இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதிக்கொண்ட முத்தரப்பு ஒரு நாள் தொடராக நாட்வெஸ்ட் கோப்பை நடைபெற்றது.
இந்த தொடருக்கு முன்னர்தான் கென்யாவில் நைரோபி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மற்ற அணிகள் வியந்து பார்க்கும் விதமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி சவால் மிக்க அணியாக உருவெடுத்தது. முற்றிலும் மாறுபட்டு இருந்து புதிய இந்திய அணியை உருவாக்கி உபயதாரராக செளரவ் கங்குலி இருந்தார். அவருக்கு பக்கபலமாக பயிற்சியாளர் ஜான் ரைட்டும் உடன் இருந்தார்.
அதுவரை இந்திய அணியிடம் இல்லாத ஆக்ரோஷம், பரபரப்பான ஆட்டம் என அணியின் அனைத்து பரிமணாமங்களும் மாறிப்போயிருந்த நிலையில் நாத்வெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் தலா மூன்று முறை மோதிக்கொள்ளும் விதமாக அட்டவணை அமைந்திருந்தது. இதில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும், இங்கிலாந்துக்கு எதிராக ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு போட்டியில் முடிவில்லாமல் போனது.
மொத்தம் விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்ற இந்தியா இறுதிபோட்டியில் இங்கிலாந்து அணியை, கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸில் சந்தித்தது. 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றிக்கு பின்னர் 19 ஆண்டுகள் கழித்து மீண்டும் லார்ட்ஸ் மைாதானத்தில் இந்தியாவுக்கு இறுதிப்போட்டி.
இந்த போட்டியின் முடிவு அனைவரும் அறிந்தது என்றாலும், அதில் நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தும் இந்தியர்களின் மனதில் நீங்காத நினைவாக நிலைத்து இருக்கும். டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 325 ரன்கள் குவித்தது. அவ்வளவுதான் அப்போதெல்லாம், 275 ரன்களுக்கு மேல் சேஸ் செய்வதே மிகவும் கடினமான விஷயமாக இருந்து வந்த நிலையில் 300+ என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத இலக்காகவே இருந்தது.
என்னதான் இருந்தாலும் இந்தியர்களுக்கு எப்போது ஒரு வித நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையானது ஏதாவது ஒரு மேஜிக் நிகழ்ந்துவிடாத என்பதுதான். ஆம் அன்றை போட்டியில் நிகழ்ந்தது. அதற்கு தொடக்கம் கொடுத்தது கங்குலி - சேவாக் ஜோடி. மிகப் பெரிய இலக்கை விரட்டுவதற்கு ஏற்ப இங்கிலாந்து பவுலர்களின் பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டி வலுவான தொடக்கத்தை தந்தனர்.
இவர்கள் இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 106 ரன்கள் குவித்தனர். முதலில் கங்குலி, பின் சேவாக் என அடுத்தடுத்து அவுட்டானார்கள். அதன் பின்னர் வந்த தினேஷ் மோங்கிய, சச்சின் டென்டுல்கர், ராகுல் திராவிட் என மூவரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க 146 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து கிட்டத்தட்ட தோல்விக்கு அருகில் சென்றுவிட்டது.
அந்த காலகட்டத்தில் சச்சின் அவுட்டானாலே டிவியை ஆஃப் செய்துவிடும் பழக்கம் அநேகம் பேருக்கு உண்டு. அப்படி நினைத்து அன்றைய நாளில் டிவி ஆஃப் செய்துவிட்டு, பின்னர் யுவராஜ் - கைஃப் வெளிப்படுத்திய ஷோவை பார்க்க முடியாமல் மிஸ் செய்து ஏமாந்துபோனவர்கள் இன்றளவும் வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்கள். சொல்லப்போனால் இந்த சம்பவத்துக்கு பிறகுதான் சச்சின் அவுட்டானாலும் தொடர்ந்து ஆட்டத்தை இறுதிவரை பார்க்கும் பழக்கம் இந்தியர்களிடம் ஏற்பட்டது என்றே கூறலாம்.
மிடில் ஆர்டரில் பேட் செய்து யுவராஜ் - கைஃப் இணைந்து 121 ரன்கள் சேர்த்தனர். யுவராஜ் தன் பங்குக்கு 69 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனால் கடைசி வரை பேட் செய்த யுவராஜ் டெயிலண்டர்களான ஹர்பஜனை வைத்து இன்னிங்ஸ் டெவலப் செய்து கடைசியில், ஆட்டத்தின் கடைசி ஓவரில் அணிக்கு வெற்றியும் தேடி தந்தார்.
இந்திய அணி வெற்றி பெற்ற அந்த தருணத்தில் புகழ் பெற்ற லார்ட்ஸ் பால்கனியின் இருந்த கேப்டன் கங்குலி, தனது டிஷர்ட்டை கழட்டி சுழற்றி ஆக்ரோஷத்துடன் வெற்றி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த தொடருக்கு முன்னர் இந்தியா சுற்றுப்பயணம் வந்த இந்தியா 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியபோது, மும்பையில் நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் வென்று 3-3 என சமநிலை பெற்றது. அந்த வெற்றிக்கு பின்னர் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பிளின்டாப் தனது டிஷர்ட்டை கழட்டிவிட்டு மைதானத்தில் ஓடினார். இதற்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக கங்குலி இப்படியொரு மறக்க முடியாத சம்பவத்தை செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணி புதிய பிரணாமத்தை அடைவதற்கு விதை போட்டது கங்குலி என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த வகையில் மார்தட்டிக்கொள்வதற்கு அடிப்படை ஆதாரமாக இருந்த சம்பவங்களில் ஒன்றாக இந்த போட்டி அமைந்தது.
இந்திய கிரிக்கெட்டில் சிறந்த தருணம் என்று சொன்னால் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்த போட்டியில், கங்குலியின் இந்த டாப்லெஸ் செலிபிரேஷனும் தவறாமல் இடம்பிடிக்கும். அந்த வகையில் 19 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தரமான நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
டாபிக்ஸ்