The Ashes: தோள்பட்டையில் காயம் காரணமாக ஆஷஸ் தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர்
Ollie Pope: முதல் இரண்டு டெஸ்ட்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று வீறு நடை போட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஒல்லி போப், எஞ்சிய ஆஷஸ் தொடரிலிருந்து விலக நேரிட்டுள்ளது.
இத்தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒல்லி போப், 2வது டெஸ்டில் பீல்டிங் செய்த போது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவரை சோதித்த மருத்துவ நிபுணர்கள் ஓய்வு தேவை என அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்பேரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஒல்லி போப், 2வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 42 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 ரன்களும் எடுத்தார். முதல் டெஸ்டில் 45 ரன்கள் எடுத்தார்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி ஹெட்டிங்லியில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
முதல் இரண்டு டெஸ்ட்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று வீறு நடை போட்டு வருகிறது.
ஆஷஸ் 2023 தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 2-0 என்ற கணக்கில் ஆஸி., முன்னிலை வகித்து வருகிறது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 416 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 110 ரன்கள் எடுத்தார்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பீல்டிங் செய்தபோது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்