டிராவில் முடிந்த ஐஎஸ்எல் தொடரின் மைல்கல் போட்டி..முட்டி மோதிய சென்னையின் எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி பலப்பரிட்சை
ஐஎஸ்எல் தொடரின் மைல்கல் போட்டியில் சென்னையின் எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி பலப்பரிட்சை நடத்திய நிலையில், போட்டி டிரா ஆகியுள்ளது.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 1000வது போட்டி சென்னையில் உள்ள ஜவர்ஹர்லால் மைதானத்தில் நடைபெற்றது. மைல்கல் போட்டியான இதில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படாமல் டிராவில் முடிந்துள்ளது.
இந்த போட்டியின் முடிவுக்கு பின்னர் சென்னையின் எஃப்சி அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. இதுவரை விளையாடியிருக்கும் 8 போட்டிகளில் சென்னை அணி 3 வெற்றி, 3 டிரா, 2 தோல்விகளை சந்தித்துள்ளது.
மைல்கல் போட்டி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி எப்படி உச்சக்கட்ட பரபரப்புடன் இருக்குமோ, அதே போன்று கால்பந்து விளையாட்டிலும் சென்னையின் எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகளுக்கு இடையிலான போட்டி இருந்து வருகிறது.
அதிலும் கடந்த 2013இல் தொடங்கப்பட்ட ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 11வது ஆண்டில் 1000ஆவது ஆட்டம் என்ற மைல்கல் போட்டி இவ்விரு அணிகளுக்கு இடையே சென்னையில் நடைபெற்றது.
விறுவிறுப்பான ஆட்டம்
4-1-4-1 என்ற பார்மேஷனுடன் சென்னையின் எஃப்சி அணியும், 4-3-3 என்ற பார்மேஷனில் மும்பை எஃப்சி அணியும் களமிறங்கின.
பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன் பின்னர் இரண்டாம் பாதியில் விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிகள் விறுவிறுப்பாக கோல் முயற்சியில் ஈடுபட்டன.
இதற்கு பலனாக சென்னை அணி தனது முதல் கோலை அடித்தது. ரயான் எட்வார்ட்ஸ் ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் இந்த கோலை அடித்தார். இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த மும்பை அடுத்த மூன்று நிமிடங்களில் தங்கள் அணிக்கான முதல் கோலை பெற்றது.
ஆட்டத்தின் 63வது நிமிடத்தில் நாதன் ஆஷர் ரோட்ரிக்ஸ் கோல் அடித்தார். இதைத்தொடர்ந்து அடுத்த கோலுக்கு முன்னேறும் முயற்சிகளிலும் தோல்வியை தழுவிய சென்னை, மும்பை அணிகள் வாய்ப்புகளையும் வீணடித்தன. இதனால் முழு ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி டிரா ஆனது.
அத்துடன் ஐஎஸ்எல் தொடரின் சிறப்பு மிக்க 1000வது போட்டி வெற்றியாளர் யாருமின்றி முடிவுற்றது. மும்பை அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 8வது இடத்தில் உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் 2 வெற்றி 4 டிரா, ஒரு தோல்வியை அந்த அணி பெற்றுள்ளது.
டாபிக்ஸ்