HT Sports Special: அந்த கால கம்பீர்! ஓபனிங்கில் நங்கூரமிட்டு விளையாடும் பேட்ஸ்மேன் - கவாஸ்கரின் சிறந்த பார்ட்னர்
கிரிக்கெட் விளையாட்டில் தைரியமான பேட்ஸ்மேன் என பெயரெடுத்த சேட்டன் சவுகான், கிரிக்கெட்டுக்கு பின்னர் முக்கிய அரசியல்வாதியாக உருவெடுத்து அமைச்சராகவும் இருந்துள்ளார். துர்தஷ்டவஷமாக கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்பட்டு, போராடி உயிரிழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியில் 1970 காலகட்டத்தில் எதிரணியின் அசுரத்தனமான வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும் துணிச்சலான பேட்ஸ்மேன் என பெயரெடுத்தவர் சேத்தன் சவுகான். உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இவர் இந்தியாவுக்கு டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் 1969 முதல் 1981 வரை விளையாடியுள்ளார்.
இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான இவர் சுனில் கவாஸ்கருடன் இணைந்து 10 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார். அந்த காலகட்டத்தின் சேவாக் - கம்பீர் என இந்த ஓபனிங் கூட்டணியை சொல்லும் விதமாக ஒரு புறம் கவாஸ்கர் அதிரடியில் மிரட்ட, மறுபுறம் நங்கூரமிட்டு பேட் செய்வார் சேத்தன் சவுகான்.
இந்தியாவுக்கு 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 2084 ரன்கள் எடுத்திருக்கும் இவர் ஒரு முறை கூட சதமடித்தது இல்லை. அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்தும், ஒரு சதம் கூட அடிக்காத வீரர் என்ற மோசமான சாதனை இவர் வசம் உள்ளது. ஆனால் ஆட்டத்துக்கு தேவைப்படும் முக்கிய இன்னிங்ஸையும், நல்ல தொடக்கத்தையும் பல போட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
கவாஸ்கரும் - சேத்தன் சவுகானும் இணைந்து 59 போட்டிகளில் ஒபனிங் இணையாக பேட் செய்து 3022 ரன்கள் குவித்துள்ளது. இவர் சிறந்த கட்டை மன்னன் என்பதற்கு சாட்சியாக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின்போது அந்நாட்டு உள்ளூர் அணியான விக்டோரியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 157 ரன்கள் வெறும் 2 பவுண்டரிகளை மட்டுமே அடித்து எடுத்தார். இந்த இன்னிங்ஸில் அவர் 516 நிமிடங்கள் களத்தில் இருந்து பேட் செய்துள்ளார்.
தனது 22வது வயதில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமான சேத்தன் செளகான், அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் விளையாடினார். 1979ஆம் ஆண்டில் ஓவல் மைதானத்தில் சேத்தன் செளகான் - சுனில் கவாஸ்கர் இணைந்து 213 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இது 1936இல் இந்திய பேட்ஸ்மேன்களான மெர்சண்ட் - முஸ்தாக் அலி நிகழ்த்திய 203 ரன்கள் என்ற ஓபனிங் விக்கெட்டுகான சாதனையை முறியடித்தது. இந்த சாதனை போட்டியில் சவுகான் 80 ரன்கள் அடித்தார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் மகாராஷ்ட்ரா, டெல்லி அணிக்காக விளையாடியிருக்கும் சேத்தன் சவுகான் 179 போட்டிகளில் 11, 143 ரன்களை குவித்துள்ளார். இதில் 21 சதங்களையும் அவர் அடித்துள்ளார். தனது கடைசி முதல் தர கிரிக்கெட்டில் விரல் முறிவு ஏற்பட்டபோதிலும் ரிஸ்க் எடுத்து பேட் செய்த சவுகான், அந்த போட்டியில் 98 மற்றும் 54 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்து சேத்தன் சவுகான், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருதை 1981இல் பெற்றுள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அரசியல் பக்கம் திரும்பினார் சேத்தன் சவுகான். பாஜகவின் எம்பியாக 1991 மற்றும் 1998இல் தேர்வானார். 2017ஆம் ஆண்டில் யோகி ஆதித்யநாத் அரசின் அமைச்சராக பொறுப்பேற்று கொண்ட சவுகான், 2020இல் கொரோனா முதல் அலையின் போது நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். நோய் தொற்று இவருக்கு தீவிரமான நிலையில் உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கியதால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி தனது 73வது வயதில் உயிரிழந்தார்.
இவர் கிரிக்கெட் விளையாடிய காலகட்டத்தில் வேக பந்து வீச்சு என்பது மிரட்டும் விதமாக அமைந்திருந்து. அந்த வகையில் வேக பந்து வீச்சாளர்களை தைரியமாக எதிர்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் துணிச்சலான ஓபனிங் பேட்ஸ்மேன் என பெயரெடுத்த சேத்தன் சவுகானின் 76வது பிறந்தநாள் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்