Mohammad Rizwan:இந்தியாவை வென்றதால் எனக்கு எல்லாமே இலவசம்! பாக்., வீரர் ரிஸ்வான்
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை தோற்கடித்தபோது எங்களுக்கு அனைத்தையும் இலவசமாக கொடுத்து பாகிஸ்தான் மக்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழும் முகமது ரிஸ்வான் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்து வருகிறார். கடந்த ஆண்டிலிருந்து தனது உச்சகட்ட பார்ம் மூலம் அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறினார்.
குறிப்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுடன் தொடக்க பேட்ஸ்மேனாக இணைந்து பல்வேறு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இவர்கள் இருவரும் பல போட்டிகளில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
2021ஆம் ஆண்டில் முகமது ரிஸ்வான் - பாபர் அசாம் ஜோடி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, ஆண்டின் சிறந்த ஜோடியாக திகழ்ந்தது. இந்த ஜோடிதான் ஐசிசி போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முதல் வெற்றியை பெற காரணமாக இருந்தது.
2021 டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவின் 152 ரன் டார்கெட்டை விக்கெட் இழப்பின்றி இவர்கள் இருவருமே இணைந்து அடித்து முடித்து முதல் வெற்றியை சாதனை வெற்றியாக்கினர்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றதால் பல்வேறு சலுகைகளை பெற்று தனது வாழ்க்கையே மாறியதாக முகமது ரிஸ்வான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவுக்கு எதிராக நாங்கள் முதல் ஐசிசி போட்டியை வென்றபோது, அதுவும் ஒரு போட்டி என்றே நினைத்தேன். ஏனென்றால் நாங்கள் மிகவும் எளிதாக வெற்றி பெற்றோம்.
ஆனால் பாகிஸ்தானுக்கு வந்த பிறகு அந்த வெற்றியில் எவ்வளவு அர்த்தங்கள் உள்ளது என்பதை உணர்ந்தேன். நாங்கள் எந்த கடைக்கு சென்றாலும் என்னிடம் யாரும் பணம் வாங்கியதில்லை. அவர்கள் பரவாயில்லை, நீங்கள் செல்லுங்கள். உங்களிடம் பணம் வாங்க மாட்டோம் என்றார்கள்.
சிலர் உங்களுக்கு இங்கு அனைத்துமே இலவசம்தான் என்றார்கள். இப்படியொரு அன்பை அந்த போட்டிக்கு பின்னர் பாகிஸ்தான் மக்கள் என்னிடம் வெளிப்படுத்தினர். இதன் பின்னர்தான் இந்த வெற்றி பாகிஸ்தான் மக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர முடிந்தது " என்று ஆச்சர்யம் பொங்க கூறினார்.
முகமது ரிஸ்வான் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடும் டெஸ்ட் போட்டியில் இடம்பிடித்துள்ளார். சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.
டாபிக்ஸ்