HT Sports Special: 'நீங்க இல்லைனா எப்படி'-ஆஷஸ் தொடரில் மொயீன் அலி இடம்பிடித்த கதை!
The Ashes: 34 வயதாகும் மொயீன் அலி, இதுவரை 64 டெஸ்ட்களில் விளையாடி 2,914 ரன்களை எடுத்துள்ளார். 195 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
புகழ்பெற்ற ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார் மொயீன் அலி.
80களில் வெளியான தமிழ் திரைப்படங்களில் இவரு இருந்தா தான் இந்த கேஸை முடிக்க முடியும்னு சொல்வாங்க. அடுத்த கட்டில் கதாநாயகனை காட்டுவார்கள்.
மொயீன் அலியை டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு அழைத்ததும் அதுபோன்ற ஒரு காட்சியுடன் ஒப்பிடலாம்.
அவர் 2021ம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். பிறகு எப்படி அவர் மீண்டும் அணியில் இடம்பிடித்தார்.
இங்கிலாந்து வீரர் ஜாக் லீச் காயம் காரணமாக அணியில் இடம்பெற முடியவில்லை. இதையடுத்து, மொயீன் அலியை சந்தித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தலைமைப் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம், இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாக இயக்குநர் ராப் கீ ஆகியோர் ஓய்வு முடிவை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினர்.
இதையடுத்து, சில தினங்கள் கழித்து அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து ராப் கீ கூறுகையில், "மொயீன் அலியை இந்த வாரம் சந்தித்தோம். டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்புமாறு கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கைக்கு பதிலளிக்க சில தினங்கள் எடுத்துக் கொண்டார். அவருடைய அனுபவம், ஆல்-ரவுண்டர் திறன் ஆகியவை ஆஷஸ் தொடரில் நிச்சயம் பயன்படும்" என்றார்.
ஓய்வை அறிவித்த பிறகு அவர் முதல் தர கிரிக்கெட் எதிலும் விளையாடவில்லை. இதனால், அவர் தீவிர பயிற்சியில் ஈடுபடவுள்ளார்.
34 வயதாகும் மொயீன் அலி, இதுவரை 64 டெஸ்ட்களில் விளையாடி 2,914 ரன்களை எடுத்துள்ளார். 195 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இலங்கை அணி டி20 உலகக் கோப்பையை வென்றதில் மொயீன் அலி முக்கியப் பங்களித்திருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறை சாம்பியன் பட்டங்களை வென்றிருந்தபோது மொயீன் அலி முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
டெஸ்டில் ஓய்வு அறிவித்த பிறகு மொயீன் அலியை அணியில் இடம்பெற அழைத்திருப்பது அவர் எந்த அளவுக்கு முக்கியமான வீரர் என்பதை இங்கிலாந்து அணி உணர்ந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.
ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே நடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகும். கடந்த முறை ஆஸ்திரேலிய அணி அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்தை வென்று தொடரை கைப்பற்றியது.
இந்த முறையில் இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் நடக்கவுள்ளது. வரும் 16ம் தேதி இப்போட்டி தொடங்கவுள்ளது.
டாபிக்ஸ்