MLC 2023: 'க்ரீஸ் டப்பாவ எப்படி மிதிச்ச'! 11 ஆண்டு கால பகையை தீர்த்த பொல்லார்டு - ஐபிஎல் தொடரில் விட்டதை பிடிச்சாச்சு
முக்கியத்துவமான மோதலாக இருந்த போட்டியில் நீயா நானா என்று டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், எம்ஐ நியூயார்க் அணிகள் சவால் விடுக்கும் விதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் இறுதியில் எம்ஐ நியூயார்க் அதில் வெற்றி பெற்றது.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் எம்எல்சி டி20 லீக் தொடரின் குவாலிபயர் 2 போட்டி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - எம்ஐ நியூயார்க் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் எடுத்தன.
டேவான் கான்வே 38. மிலிந்த் குமார் 37 ஆகியோர் அதிகபட்சமாக எடுத்தனர். ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கு தலைவலி தரும் பவுலராக இருந்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரான ட்ரெண்ட் போல்ட் அற்புதமான பவுலிங்கால் டெக்சாஸ் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 159 ரன்களை சேஸ் செய்த எம்ஐ நியூயார்க் அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் டிவால்ட் ப்ரீவிஸ் 41 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் எம்ஐ நியூயார்க் அணி முதல் எம்எல்சி தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதையடுத்து சீயாட்டில் ஓர்காஸ் - எம்ஐ நியூயார்க் அணிகளுக்கு இடையே இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் திங்கள் கிழமை அதிகாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் மிகப் பெரிய மோதலாக இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளின் கிளை அணிகளான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - எம்ஐ நியூயார்க் அணிகள் மோதின. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்த இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கிளை அணியான எம்ஐ நியூயார்க் வெற்றி பெற்றது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் இரண்டு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் இரண்டு போட்டிகளிலும் மும்பை தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விட்டதை தற்போது எம்எல்சி தொடரில் பிடித்துள்ளது மும்பை அணி.
அத்துடன் கடந்த 2012 ஐபிஎல் தொடரில் எலிமினேட்டர் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. அப்போது மும்பை அணியின் பேட்ஸ்மேன் பொல்லார்டு விக்கெட்டை வீழ்த்திய பிராவோ, அவரை பார்த்து பேக்குகளை பேக் செய்து விமானத்தில் பறந்து வீட்டுக்கு செல்லுமாறு செய்கை காட்டினார்.
ஐபிஎல் போட்டிகளில் நிகழ்ந்த சுவாரஸ்ய சம்பவங்களில் இதுவும் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த சம்பவம் நடந்து 11 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் எலிமினேட்டர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் கிளை அணிகள் மோதி கொண்டது. இந்த முறை மும்பை வெற்றி பெற்றிருக்கும் நிலையில், போட்டி முடிந்த பிறகு எம்ஐ நியூயார்க கேப்டனான பொல்லார்டு, டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வீரர் பிராவோவிடம் அவரைபோல் பேக் செய்து விமானத்தில் பறந்து வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.
இதன் மூலம் 11 ஆண்டு கால பகையை தீர்த்து கொண்டுள்ளார். இந்த விடியோவும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
டாபிக்ஸ்