MLC 2023: கேப்டன் ஆன டூ பிளெசிஸ் - டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் சங்கமிக்கும் முன்னாள், இந்நாள் சிஎஸ்கே வீரர்கள்
அமெரிக்காவில் நடைபெற இருக்கும் எம்எல்சி டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்தமான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் மாஜி சிஎஸ்கே வீரர்கள் பலரும் இடம்பிடித்துள்ளனர். இந்த அணிக்கு கேப்டனாக சிஎஸ்கே முன்னாள் வீரர் பாப் டூ ப்ளெசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டு பெரிய அளவில் பிரபலம் ஆகாத நாடுகளிலும் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கிரிக்கெட் விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கும் அமெரிக்காவில் மேஜர் கிரிக்கெட் லீக் என்ற பெயரில் டி20 தொடர் நடத்தப்படவுள்ளது.
எம்எல்சி என்று அழைக்கப்படும் இந்த தொடர் ஜூலை 14 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் முறையாக அமெரிக்காவில் நடைபெறும் இந்த டி20 லீக் தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஐபிஎல் தொடரை சேர்ந்த மூன்று அணிகள் பங்கேற்கின்றன. அதன்படி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சலிஸ் நைட் ரைடர்ஸ், எம்ஐ நியூயார்க், வாஷிங்டன் ப்ரீடம், சீட்டில் ஆர்காஸ், சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
முதல் போட்டி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - லாஸ் ஏஞ்சலிஸ் நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே டல்லாஸ் நகரில் உள்ள ப்ரேரி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளிலும் 19 வீரர்களும், 9 ஓவர்சிஸ் வீரர்களும் இடம்பெறலாம். ஆடும் லெவனில் அதிகபட்சமாக 6 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் விளையாடலாம். அத்துடன் 5 உள்ளூர் வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் களமிறக்கப்பட வேண்டும்.
இதையடுத்து டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னாள் மற்றும் இந்நாள் சிஎஸ்கே வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சிஎஸ்கே அணியில் நீண்ட நாள்களாக இடம்பிடித்த டூ ப்ளெசிஸ், டுவெய்ன் பிராவா, இந்த சீசனில் ஓய்வை அறிவித்த அம்பத்தி ராயுடு ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அத்துடன் அணியில் தற்போது விளையாடி வரும் டேவான் கான்வே, மிட்செல் சாண்ட்னர் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் தென்ஆப்பரிக்கா அதிரடி பேட்ஸ்மேன்கள் டேவிட் மில்லர், ஜெரால்ட் கோட்ஸி, ஆஸ்திரேலியா பவுலிங் ஆல்ரவுண்டர் டேனியல் சாம்ஸ் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். மார்ச் மாதம் நடைபெற்ற எம்எல்சி தொடருக்கான வீரர்கள் தேர்வில் முன்னாள் சர்வதேச வீரர்களான ரஸ்டி தெரான், சமி அஸ்லாம், சாய்தேஜ் முக்கமல்லா, மிலிந்த் குமார், கோடி செட்டி, கால்வின் சாவேஜ், ஸியா ஷெஹ்சாத், கேமரூன் ஸ்டீவன்சன், லஹிரு மிலந்தா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்படவுள்ளார். எரிக் சிம்மன்ஸ், ஆல்பி மோர்கல் ஆகியோர் உதவி பயிற்சியாளராக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தென்ஆப்பரிக்காவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற SAT20 லீக் தொடரில் சிஎஸ்கே அணி ஜோக்கன்ஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கியது. இந்த அணிக்கு கேப்டனாக டூ பிளெசிஸ் நியமிக்கப்பட்ட நிலையில், முதல் சீசனில் அரையிறுதி போட்டி வரை தகுதி பெற்றது.
இதைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் நடைபெறும் முதல் டி20 லீக் தொடரான எம்எல்சி தொடரில் டெக்சாஸ் அணியை வாங்கியிருக்கும் சிஎஸ்கே நிர்வாகம், அந்த அணியில் முன்னாள் மற்றும் இந்நாள் சிஎஸ்கே வீரர்கள் இணைந்த அணியை உருவாக்கியுள்ளது.
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக டுவிட்டர் பக்கம் ஒன்றும் உருவாக்கப்பட்டு அணி தொடர்பான அப்டேட்களும் அதில் வெளியிடப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்