ஓய்வை அறிவித்தார் இந்திய மகளிர் கிரிக்கெட் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ்
இந்தியா மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீராங்கனையுமான மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் டென்டுல்கர் போன்று, மகளிர் கிரிக்கெட்டில் ரன் மெசினாக இருந்த வந்த வீராங்கனை மிதாலி ராஜ். 1999 முதல் 2022 வரை என 23 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுகளில் பங்கேற்று வரும் இவர், தனது 39வது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையை பெற்றுள்ள மிதாலி ராஜ், சர்வதேச மகளிர் கிரிக்கெட் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையும் தன் வசம் வைத்துள்ளார். இதுவரை இந்தியாவுக்கு 333 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலி ராஜ் 10,868 ரன்களை குவித்துள்ளார்.
ஓய்வு குறித்த அறிவிப்பை டுவிட்டரில் பகிர்ந்துள்ள மிதாலி ராஜ், இத்தனை ஆண்டுகளாக உங்களது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றிகள். உங்களது ஆசீர்வாதங்கள் மற்றும் ஆதரவுடன் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குகிறேன்"என்று குறிப்பட்டுள்ளார்.
இந்த பதிவுடன் உணர்ச்சி பொங்க கடிதம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "இளம் வீராங்கனையாக இந்திய அணியின் நீள நிற ஜெர்சியை அணிந்து விளையாட தொடங்கிய அந்த தருணத்தை மிகப் பெரிய கெளரவமாக உணர்ந்தேன். எனது கிரிக்கெட் பயணம் பல்வேறு உயர்வு மற்றும் தாழ்வுகளை கொண்டதாகவே இருந்துள்ளது. ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு ஏதாவதொரு புதிய விஷயத்தை கற்றுக்கொடுப்பதாகவே அமைந்தது. கடந்த 23 ஆண்டுகள் மிகவும் திருப்திகரமாகவும், சவால் நிறைந்ததாகவும், இனிமையான நாள்களாகவும் இருந்தன.
இந்த பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. இந்த நாள் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறும் நாளாக உள்ளது.
ஒவ்வொரு முறையும் களத்தில் இறங்கும்போது, இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுதர வேண்டும் என்ற நோக்கத்துடன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். இந்திய அணியில் ஒரு அங்கமாக இருக்கும் விதமாக கிடைத்த வாய்ப்பை நான் பெரிதாக மதித்துள்ளேன்.
எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்கு இது சரியான தருணம் என நினைக்கிறேன். தற்போது இந்திய அணி திறமையான இளம் வீராங்கனைகளின் கைகளில் உள்ளது. எனவே மகளிர் அணியின் எதிர்காலமும் சிறப்பாக உள்ளது.
பிசிசிஐ மற்றும் அதன் செயலாளர் ஜெய் ஷா, ஒரு வீராங்கனையாகவும், அணியின் கேப்டனாகவும் எனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நீண்ட ஆண்டுகளாக அணியை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு கிடைத்ததை மிகப் பெரிய கெளரவமாக கருதுகிறேன். இந்த வாய்ப்பு முதலில் ஒரு வீராங்கனையாக என்னை நன்கு செதுக்கி, பின்னர் மகளிர் அணி கேப்டனாகவும் உருமாற்றியது.
இந்தப் பயணம் இப்போது முடிவுற்று இருக்கலாம். கிரிக்கெட் எனது பங்களிப்பை தொடர்ந்து அளிக்கும் விதமாக வேறொரு பணி கிடைத்தாலும் அதை மகளிர் கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்காக தவறாமல் செய்வேன்.
எனது ரசிகர்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு தனிப்பட்ட விதத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்"
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டு துறையில் வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜூனா விருது, பத்மஸ்ரீ விருதுகளை வென்றவரான மிதாலி ராஜ், கடந்த 1999ஆம் ஆண்டு தனது 16வது வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். சுமார் 2 தசாப்தங்களாக விளையாடி வரும் அவர் ஜாம்பவான் வீராங்கனையாக திகழ்கிறார். கேப்டனாக 2005, 2017ஆம் ஆண்டுகளில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். ஆனால் துர்தஷ்டவசமாக இரண்டு முறையும் கோப்பையை பெறவில்லை.
மொத்தம் 232 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள மிதாலி ராஜ் 7805 ரன்கள், 50.68 சராசரியில் எடுத்துள்ளார். இதில் 7 சதங்கள் அடங்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் தென்ஆப்பரிக்காவுக்கு எதிராக போட்டியில் கடைசியாக விளையாடினார். இந்தப் போட்டியில் 84 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்தார்.
டாபிக்ஸ்