Asia cup 2022: ஆசிய கோப்பை வென்ற இலங்கை! சாதித்தது எப்படி?
ஆப்கானிஸ்தானிடம் படுதோல்வியுடன் தொடரை தொடங்கிய இலங்கை அடுத்து எஞ்சி போட்டிகள் அனைத்திலும் வெற்றியை மட்டும் பெற்று ஆசியாவின் நடப்பு சாம்பியன் ஆகியுள்ளது. இந்த வெற்றி பயணத்தில் பலம் வாய்ந்த இந்தியாவை ஒரு முறையும், பாகிஸ்தான் அணியை இரண்டு முறையில் வீழ்த்தி டி20 உலகக்கோப்பை சவாலுக்கு தயாராகிவிட்டது.
ஆறாவது முறையாக ஆசிய கோப்பை வென்ற இலங்கை அணிக்கு இந்த முறை இதற்கு முன்னர் இல்லாத அளவுக்கு ரசிகர்களால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பையுடன் பொதுமக்கள் முன்னிலையில் பேருந்து உலா வந்த வீரர்களிடம் தங்களது வாழ்த்துகளை பொதுமக்கள் பகிர்ந்தனர்.
கடும் பொருளதார நெருக்கடியில் தவித்து வந்த நாட்டு மக்களை புன்னகைக்க வைத்ததோடு அவர்களை இறுக்கமான மனநிலையிலிருந்து தளர்த்தியது இலங்கை அணி பெற்ற இந்த வெற்றி.
இதன் காரணமாகவே உலகக் கோப்பை தொடருக்கு இணையாக இந்த வெற்றி கொண்டாட்டம் பார்க்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2020ஆம் ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கொரோனாவால் தடைபட்டது. பின்னர் மீண்டும் 2022இல் நடைபெறுவதற்கான நேரம் வந்த நேரத்தில் கடும் பொருளதாரா சிக்கலுக்கு ஆளான காரணத்தால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் தொடரை நடத்த முடியாத சூழல் உருவாகியது. இதனால் போட்டியில் பஙகேற்கும் பிற நாடுகளுக்கு வாய்ப்பு அளிக்காமல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
கடுமையான நெருக்கடிக்குள் ஆளாகி இருந்தே வீரர்கள் இந்த தொடரில் விளையாடுவதற்கு களமிறங்கினர். முதல் போட்டியில் இதுவரை தோல்வியை கண்டிராத ஆப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வி. பேட்டிங், பெளலிங் இரண்டிலும் உச்சகட்ட சொதப்பலுடன் தொடரை தொடங்கியது இலங்கை.
பின்னர் இரண்டாவது போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவர் வரை சென்றே 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை.
ஆனால் இந்த சுற்றில் லீக் ஆட்டத்தை போல் இல்லாமல் மிகவும் தன்னம்பிக்கையுடன், துணிவுடன் வீரர்கள் தங்களது முழுதிறமையை தங்களது ஆட்டத்திறனில் வெளிப்படுத்தினர்.
லீக் சுற்றில் ஆப்கானிஸ்தானிடம் பெற்ற தோல்விக்கு பதிலடி, பின்னர் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கடும் சவால்களை சந்திக்க நேரிட்டபோதிலும் த்ரில்லான வெற்றி பெற்று முதல் இரண்டு போட்டியிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இனி மற்ற அணிகள் தங்களுடன் இறுதியில் மோதும் சூழலை உருவாக்கியது.
கடைசி சூப்பர் 4 சுற்று போட்டியான இலங்கை - பாகிஸ்தானுடன் மோதும் போட்டிக்கு முன்னரே இவ்விரு அணிகளும்தான் இறுதியில் மோதவுள்ளன என்பது உறுதியாகிவிட்டது. இதையடுத்து சம்பிரதாய போட்டியாக நடைபெற்ற அந்த கடைசி போட்டியிலும் இலங்கை வீரர்கள் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் விளையாடி வெற்றியும் பெற்றனர்.
இறுதியில் ஆசிய கோப்பை தொடரில் தன்னை ஒரு டாப் அணியாக மீண்டும் நிருபித்துள்ளது. பொருளதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு இந்த வெற்றி ஓரளவு மனநிம்மதியை தருவதோடு, எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடர் சவாலையும் எதிர்கொள்வதற்கான முழு தன்னம்பிக்கையும், ஆற்றலையும் தரும் என்றே எதிர்பார்க்கலாம்.