Major League Cricket: டேவான் கான்வே - டேவிட் மில்லர் அதிரடி! ஆரம்பத்திலேயே அசத்திய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர்கள், ஐபிஎல் அணிகளின் மற்றொரு கிளை அணிகள் மோதிக்கொள்ள மினி ஐபிஎல் போட்டிகள் போன்ற அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெறும் இந்த மேஜர் லீக் கிரிக்கெட் அமைந்துள்ளது. முதல் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சலிஸ் நைட் ரைடர்ஸை வீழ்த்தியுள்ளது.
எந்த விஷயத்திலும் வித்தியாசமாக இருந்து வரும் அமெரிக்காவில் கிரிக்கெட்டை விட அதேபோன்று அமைந்திருக்கும் பேஸ்பால் விளையாட்டுக்குதான் மவுசு அதிகம். ஆனால் சமீப காலமாக அங்கு கிரிக்கெட் விளையாட்டின் மீதான ஆர்வமும், ஆதரவும் அதிகரித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணமாக உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு டி20, டி10 போட்டிகள் இருக்கின்றன. அந்த வகையிஸ் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில், சுருக்கமாக எம்எல்சி டி20 கிரிக்கெட் லீக் தொடர் அமெரிக்காவில் முதல் முறையாக நடைபெறுகிறது. இதில் 6 அணிகள் பங்கேற்கும் நிலையில், டி20 லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு உண்டான அனைத்து அடிப்படை விதிமுறைகளுடன் இந்த தொடர் நடைபெறுகிறது.
இதில் சிறப்பு அம்சமாக இந்த தொடரில் பங்கேற்கும் 6 அணிகளில் மூன்று அணிகள் ஐபிஎல் அணிகளின் கிளை அணிகளாக உள்ளன. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அணி முறையே டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், எம்ஐ நியூயார்க், லாஸ் ஏஞ்சலிஸ் நைட் ரைட்ர்ஸ் ஆகிய அணிகள் வாங்கியுள்ளன.
ஐபிஎல் அணிகளின் கிளை அணிகள் தான் இந்த தொடரில் விளையாட உள்ளது என்பதால், தங்களது அணிகளின் முன்னாள் ஸ்டார் வீரர்கள், பிற டி20 லீக்குகளில் தங்களது அணிகளில் விளையாடும் வீரர்களின் காம்போவுடன் எம்சிஎல் லீக்கில் விளையாடும் அணியை உருவாக்கி கொண்டுள்ளது. அதன்படி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டூ பிளெசிஸ், பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் உள்ளார். டேவான் கான்வே, டுவெய்ன் பிராவோ ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்த தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணிகளுக்கும் தனியொரு உள்ளூம் மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிளை அணியான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு, டெக்சாஸ் நகரில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியம் உள்ளது.
ஒவ்வொரு அணிகளுக்கு மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதிக்கொள்ளும். இதில் டாப் 4 இடங்களை பிடித்த அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இறுதிப்போட்டியில் விளையாடும். இந்த போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 11 மணி, அதிகாலை 3 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
இதையடுத்து எம்சிஎல் லீக் முதல் போட்டி ஜூலை 13ஆம் தேதி நடைபெற்றது. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - லாஸ் ஏஞ்சலிஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த டெக்சாஸ் அணி 20 ஓவரில் 181 ரன்கள் எடுத்தது. டேவான் கான்வே 55, டேவிட் மில்லர் 61 ரன்கள் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 182 ரன்களை சேஸ் செய்த லாஸ் ஏஞ்சலிஸ் நைட் ரைடர்ஸ் அணி 112 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஆண்ட்ரே ரசல் மட்டும் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் டெக்சாஸ் அணி வெற்றி பெற்றது.
டெக்சாஸ் பவுலர் முகமது மோஹ்சின் வெறும் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் முதல் போட்டியில் எம்ஐ நியூயார்க் - சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவு 2 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
மற்றொரு போட்டியில் சீட்டெல் ஆர்காஸ் - வாஷிங்டன் பிரீடம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டிகள் ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஸ்டீரிமிங் செய்யப்படுகிறது. அத்துடன் ஸ்போர்ட்ஸ் 18 டிவி சேனலிலும் ஒளிபரப்பாகிறது.
டாபிக்ஸ்