Madurai Panthers: த்ரில் வெற்றி.. பிளே-ஆஃப் சுற்றில் மதுரை: திருப்பூர் போராடி தோல்வி
மதுரை பேந்தர்ஸ் அணி சிறப்பாக விளையாடி த்ரில் வெற்றி பெற்றது. 4வது அணியாக குவாலிஃபையர் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் 27வது போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி பெற சீகம் மதுரை பேந்தர்ஸ் 20 ஓவர்களில் 161 ரன்களை நிர்ணயித்தது.
சேஸிங்கில் சிறப்பாக செயல்பட்ட திருப்பூர் அணி, கடைசி வரை போராடியது. எனினும், 4 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை வெற்றி பெற்றது.
குர்ஜப்னீத் சிங், அஜய் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முருகன் அஸ்வின், சரவணன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
திருப்பூர் சார்பில் துஷார் ரஹேஜா அரை சதம் விளாசினார். ஆனால், அவரது அரை சதம் வீணானது.
முன்னதாக, இன்று இந்த சீஸனில் தங்களின் கடைசி லீக் போட்டியில் மோதுவதற்காக சீகம் மதுரை பேந்தர்ஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் திருநெல்வேலியில் களமிறங்கியது.
இதில் டாஸ் வென்ற ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுக்க, முதலில் பேட் செய்ய களமிறங்கிய சீகம் மதுரை பேந்தர்ஸ் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான எஸ் லோகேஷ்வர் மற்றும் கேப்டன் சி ஹரி நிஷாந்த் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் சேர்த்தனர்.
கடைசி 5 போட்டிகளில் வெறும் 70 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஹரி நிஷாந்த் முக்கியமான இன்றைய ஆட்டத்தில் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி 27 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து மணிகண்டன் சுழலில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான சுரேஷ் லோகேஷ்வர் நிதானமாக விளையாடி 37 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து கருப்பசாமி பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முதலிரண்டு வீரர்களின் விக்கெட்களை வீழ்த்திய பின் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸின் பெளலர்கள் அதிகமான பவுண்டரிகளை விட்டுக்கொடுக்காமல் கச்சிதமாக பந்துவீசி சீகம் மதுரை பேந்தர்ஸின் ரன் வேகத்தை வெகுவாக குறைத்தனர்.
ஆனாலும், மூன்றாவது வீரராக களமிறங்கிய வி ஆதித்யாவும் தன் பங்கிற்கு 28 பந்துகளில் 37 எடுத்து அஜித் ராமின் சுழலில் ஆட்டமிழந்தார்.
கடைசி 2 ஓவர்களில் பெரிய ஸ்கோர் குவிக்கும் முயற்சியில் ஈடுபட்ட மதுரை பேட்டர்களான ஸ்வப்னில் சிங்(17) மற்றும் எஸ் அபிஷேக்(0) விக்கெட்களை திரிலோக் நாக் அடுத்தடுத்து எடுத்து எதிரணிக்கு அதிர்ச்சியளித்தார். இறுதி ஓவரில் புவனேஷ்வரன் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுகொடுக்க இறுதியில், சீகம் மதுரை பேந்தர்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்தது.
ப்ளே-ஆஃப் சுற்றுக்கான கடைசி இடத்தை உறுதி செய்ய சீகம் மதுரை பேந்தர்ஸிற்கு இந்தப் போட்டியில் கட்டாய வெற்றி தேவை என்ற நிலை இருந்தது. அதை நிறைவேற்றியது மதுரை.
ஒரு வேளை அந்த அணி தோற்று இருந்தால் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ப்ளேஆஃப்ஸ் இடத்தைப் பிடித்திருக்கும்.
நாளை கடைசி லீக் ஆட்டத்தில் திருச்சி, நெல்லை அணிகள் மோதுகின்றன.
இந்த வெற்றியின் மூலம், மதுரை அணி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தது.
டாபிக்ஸ்