TNPL: இந்த சீசனில் லீக்கில் மட்டும் கோவை அணி 6 வெற்றிகள் பதிவு!
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl: இந்த சீசனில் லீக்கில் மட்டும் கோவை அணி 6 வெற்றிகள் பதிவு!

TNPL: இந்த சீசனில் லீக்கில் மட்டும் கோவை அணி 6 வெற்றிகள் பதிவு!

Manigandan K T HT Tamil
Jul 02, 2023 07:15 PM IST

லைக்கா கோவை கிங்ஸ் அணி 6வது வெற்றியை ருசித்தது.

3 விக்கெட்டுகள் வீழ்த்திய கோவை பவுலர் மணிமாறன் சித்தார்த்.
3 விக்கெட்டுகள் வீழ்த்திய கோவை பவுலர் மணிமாறன் சித்தார்த். (@TNPremierLeague)

முன்னதாக, டாஸ் வென்ற சீகம் மதுரை பேந்தர்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பி சச்சின் தன் முதல் அரைசதத்தைப் பதிவு செய்ததோடு 51 பந்துகளில் 67 ரன்கள் குவிக்க, அவருக்கு அடுத்தபடியாக ஓப்பனர் ஜெ சுரேஷ் குமார் வெறும் 21 பந்துகளில் அரைசதம் விளாசி 64 ரன்கள் எடுத்தார் மற்றும் லைகா கோவை கிங்ஸின் கேப்டன் ஷாரூக் கான் இந்த சீஸனில் தன் முதல் அரைசதத்தை வெறும் 20 பந்துகளில் அடித்து இந்த டி.என்.பி.எல்லின் அதிவேக அரைசதத்தை இந்தப் போட்டியில் பதிவு செய்தார்.

சீகம் மதுரை பேந்தர்ஸின் பெளலிங்கைப் பொறுத்தவரை குர்ஜப்நீத் சிங் மற்றும் ஸ்வப்னில் சிங் தலா 2 விக்கெட்களை கைப்பற்ற, மற்ற பெளலர்கள் யாரும் பெரிதளவில் கைகொடுக்காமல் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர். இந்த சீஸனின் ப்ளேஆஃப்ஸில் இடம் பிடிக்க சீகம் மதுரை பேந்தர்ஸிற்கு 209 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை லைகா கோவை கிங்ஸ் நிர்ணயித்தது. இந்த சீஸனில் முதன்முறையாக ஓப்பனராக வாஷிங்டன் சுந்தர் இன்று களமிறங்கினாலும் அவர் 14 ரன்களில் கெளதம் தாமரை கண்ணனின் வேகத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

சிறப்பாக விளையாடிய சுரேஷ் லோகேஷ்வர் 27 பந்துகளில் 41 ரன்கள் எடுத்த போது ஜாதவேத் சுப்ரமணியனின் அற்புதமான ஃபீல்டிங்கில் ரன் அவுட்டாகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சீகம் மதுரை பேந்தர்ஸின் கேப்டன் சி ஹரி நிஷாந்த் அதிரடியாக விளையாடி வெறும் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஷாரூக் கானின் அபாரமான கேட்ச் மூலம் ஆட்டமிழந்து வெளியேற மதுரையின் வெற்றிக்கான வாய்ப்பு மங்கியது. அதன் பின் களமிறங்கிய அந்த அணியின் முக்கிய மிடில் ஆர்டர் பேட்டர்கள் வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியாமல் விரைவாக ஆட்டமிழக்கத் தொடங்கினர்.

லைகா கோவை கிங்ஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசி சித்தார்த் மணிமாறன் 3 விக்கெட்களை வீழ்த்திய அசத்தினார். அவருக்கு உறுதுணையாக பேட்டிங்கில் அதிரடி காட்டிய கேப்டன் ஷாரூக் கான் பெளலிங்கிலும் 2 முக்கிய விக்கெட்களை எடுத்து இந்த சீஸனின் ஏத்தர் பர்ப்பிள் கேப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இறுதியில் சீகம் மதுரை பேந்தர்ஸ் 18 ஓவர்களில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 44 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியிடம் தோற்றது.

இன்றையப் போட்டியில் சீகம் மதுரை பேந்தர்ஸ் தோற்றாலும் அடுத்தப் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸிற்கு எதிராக வென்றால் ப்ளேஆஃப்ஸ் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு கிடைக்கும். லைகா கோவை கிங்ஸ் முதல் அணியாக இந்த சீஸனின் ப்ளேஆஃப்ஸிற்குள் நுழைந்தாலும் இன்றைய வெற்றியால் அந்த அணி குவாலிஃபையர் 1ல் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற லைகா கோவை கிங்ஸ் கேப்டன் ஷாரூக் கான் பேசுகையில், “சாய் சுதர்ஷன் அணியில் இல்லாததால் நான் பேட்டிங்கில் முடிந்தளவு பங்களிக்க வேண்டிய சூழல் இருந்தது அதே போல் மற்ற பேட்டர்களும் சிறப்பாக செயல்பட்டதால் மிகப்பெரிய ஸ்கோரை எங்களால் பதிவு செய்ய முடிந்தது. பெளலிங்கிலும் நான் கடுமையாக முயற்சி செய்வதால் அதற்கான பலனை போட்டியின் போது பெருகிறேன். லீக் சுற்றில் பெற்ற வெற்றிகளை ப்ளேஆஃப்ஸில் பெறுவோம் என்ற நம்பிக்கையுள்ளது”, என்று கூறினார்

தோல்விக்குப்பின் சீகம் மதுரை பேந்தர்ஸ் கேப்டன் சி ஹரி நிஷாந்த் பேசுகையில், “டாஸ் வென்று ஃபீல்டிங் எடுத்த முடிவை நான் தவறாக நினைக்கவில்லை ஏனென்றால் இந்த விக்கெட் பேட்டிங்கிற்கு ஏற்றவாறு இருந்தது. எதிரணியினர் சிறப்பாக விளையாடி பெரிய ஸ்கோர் குவித்தாலும் நாங்களும் அதை சேஸ் முடியுமென்று நம்பினோம் ஆனால் பார்ட்னர்ஷிப்பை பெரிதளவில் அமைக்க முடியாததால் தோல்வியடைய நேரிட்டது. அடுத்த ஆட்டத்தில் வென்று ப்ளேஆஃப்ஸிற்குள் நுழைய முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் இந்த சீஸனில் தங்களின் முதல் வெற்றியை எதிர்நோக்கி பால்சி திருச்சி அணியும் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் இரவு 7 மணிக்கு விளையாடவுள்ளனர். இந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தோற்றால் இந்த சீஸனின் ப்ளேஆஃப்ஸ் பந்தயத்திலிருந்து வெளியேறிவிடும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.