Lyca Kovai Kings: சாய் சுதர்ஷன் 3வது அரை சதம்: கோவைக்கு 2வது வெற்றி, சேப்பாக் முதல் தோல்வி
TNPL 2023: சாய் சுதர்ஷன் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களிலும் அரை சதம் விளாசியிருக்கிறார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 9வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. இன்றிரவு 7.15 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சந்தித்தது.
முதலில் விளையாடி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது.
127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கோவை கிங்ஸ் அணி, எளிதாக இலக்கை எட்டியது. 16.3 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்றைய ஆட்டத்திலும் சாய் சுதர்ஷன் கலக்கினார். அவர் அரை சதம் விளாசி அசத்தினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 64 ரன்களை விளாசினார்.
தொடர்ச்சியாக 3 ஆட்டங்களிலும் சாய் சுதர்ஷன் அரை சதம் விளாசியிருக்கிறார். தொடக்க வீரராக களம் புகுந்த பி.சச்சின் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேனான ஜே.சுரேஷ் குமார் 34 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்தபோது லோகேஷ் ராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
3வது வீரராக களமிறங்கிய சாய் சுதர்ஷன் அதிரடியாக விளையாடி அரை சதம் பதிவு செய்தார். இவ்வாறாக கோவை அணி இலக்கை எட்டி வெற்றி கண்டது.
கோவை அணிக்கு இது 2வது வெற்றியாகும். சேப்பாக் அணிக்கு இது முதல் தோல்வி ஆகும்.
முன்னதாக, சேப்பாக் அணியில் பிரதோஷ் பால் 6 ரன்னிலும், கேப்டன் ஜெகதீசன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சந்தோஷ் சிவ், அபராஜித், சஞ்சய் யாதவ் ஆகியோரும் சொதப்பினர்.
சசிதேவ், ஹரிஷ் குமார் ஆகியோர் தான் நிதானமாக விளையாடி ஓரளவு ரன் சேர உதவினர். இவ்வாறாக 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்களை சேப்பாக் அணி சேர்த்தது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஆகும். 2016-இல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி போன்று தமிழக அளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஆகும்.
இந்தப் போட்டிகள் மூலம் பல இளம் வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 7வது சீசன் போட்டி தொடங்கி நடந்து வருகிறது.
டாபிக்ஸ்