Lyca Kovai Kings: லைகா கோவை கிங்ஸ் வெற்றித் தொடக்கம்-திருப்பூர் தமிழன்ஸ் தோல்வி
TNPL: டிஎன்பிஎல் 2023 இன் முதல் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் தோல்வியுடன் தொடங்கியுள்ளது.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-லைகா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் லைகா கோவை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய கோவை அணி 179 ரன்களை குவித்துள்ளது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் விளையாடியது.
அந்த அணியின் துஷார் ரஹேஜா மட்டுமே 33 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கர், 2 ரன்களில் நடையைக் கட்டினார்.
அவரது விக்கெட்டை முகமது வீழ்த்தினார். கேப்டன் ரவிஸ்ரீநிவாசன் சாய் கிஷோர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இவ்வாறாக 8 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 79 ரன்களில் திணறியது.
பின்னர் புவனேஸ்வரனும், மணிகண்டனும் நின்று விளையாடினர். ஆனாலும் பெரிய ஸ்கோர் எதுவும் பதிவு செய்யவில்லை.
20 ஓவர்களில் திருப்பூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களில் சுருண்டது திருப்பூர். இவ்வாறாக 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது லைகா கோவை கிங்ஸ் அணி.
முன்னதாக, ஷாருக் கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி முதலில் விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக பி.சச்சின், ஜே.சுரேஷ் குமார் ஆகியோர் களமிறங்கினர். ஆனால், இருவரும் பெரிதாக சோபிக்கவில்லை. சச்சின் 2 ரன்களில் ஆட்டமிழக்க, சுரேஷ் குமார் எல்பிடபிள்யூ ஆனார்.
முதல் விக்கெட்டை திருப்பூர் தமிழன்ஸ் பவுலர் புவனேஸ்வரன் வீழ்த்தினார். 11 ரன்கள் எடுத்திருந்போது எல்.பி.டபிள்யூ முறையில் சுரேஷ் குமார் விக்கெட்டை காலி செய்தார் புவனேஸ்வரன்.
இதன்மூலம், இந்த சீசன் டிஎன்பிஎல் போட்டியில் முதல் விக்கெட்டை எடுத்தார் புவனேஸ்வரன். பின்னர் வந்த சாய் சுதர்ஷன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மற்றொரு பக்கம், ராம் அரவிந்த் டக் அவுட்டாகிவிட, யு.முகேஷ் 33 ரன்களிலும், அதீக் அர் ரஹ்மான் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
30 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் கலக்கிய சாய் சுதர்ஷன் இந்தப் போட்டியில் அதிரடி காண்பித்தார்.
மற்றொரு பக்கம் கேப்டன் ஷாருக் கான் அவருக்கு தோள் கொடுத்தார். கேப்டன் ஷாருக் கான் விக்கெட்டை திருப்பூர் கேப்டன் சாய் கிஷோர் வீழ்த்தினார்.
திருப்பூர் தமிழன்ஸ் சார்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 4 ஓவர்கள் வீசி 26 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
புவனேஸ்வரன் 4 ஓவர்கள் வீசி 35 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இவ்வாறாக கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்தது. சாய் சுதர்ஷன் 45 பந்துகளில் 86 ரன்கள் விளாசி ரன் அவுட்டானார். 120 பந்துகளில் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் விளையாடியது.
டாபிக்ஸ்