Lyca Kovai Kings: நெல்லைக்கு இமாலய இலக்கு-கோவை கிங்ஸ் வீரர்கள் 2 பேர் அரை சதம்
நெல்லை ராயல் கிங்ஸ் சேஸிங் செய்தால் முதல் முறையாக டிஎன்பிஎல் கோப்பையை முத்தமிடும்.
ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் அணியை முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் கிரிக்கெட் மைதானத்தில் இன்று சந்தித்து.
டாஸ் வென்ற லைக்கா கோவை கிங்ஸ், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிரணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை குவித்தது.
120 பந்துகளில் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் விளையாடவுள்ளது.
முன்னதாக, லைகா கோவை கிங்ஸ் தொடர்ச்சியாக தங்களின் இரண்டாவது இறுதிப்போட்டியில் களமிறங்க, மறுபுறம் நெல்லை ராயல் கிங்ஸ் தங்களின் முதல் இறுதிப்போட்டியை சொந்த மண்ணில் விளையாட வந்திறங்கியது.
இதில், லைகா கோவை கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்து முதலில் களமிறங்க, நெல்லையின் சந்தீப் வாரியரின் சிறப்பான பந்துவீச்சில் தொடக்க வீரர் எஸ் சுஜய் (7) ஆட்டமிழக்க, இந்த சீஸனில் கோவை அணிக்கு சிறப்பான பங்களிப்பை தந்த பி சச்சினும்(12) சந்தீப் வாரியரின் 2வது ஓவரில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். மேலும் இந்த சீஸனின் அதிவேகப் பந்துவீச்சை(152கி.மீ) சந்தீப் வாரியர் அதே ஓவரில் பதிவு செய்தார்.
முதலிரண்டு விக்கெட்களை 4 ஓவர்களில் இழந்து 31 ரன்கள் எடுத்திருந்த லைகா கோவை கிங்ஸிற்காக 3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் ஜெ சுரேஷ் குமார் மற்றும் யூ முகிலேஷ் இணைந்து அதிரடியாக 71 ரன்களை சேர்த்தனர். குறிப்பாக ஜெ சுரேஷ் குமார் மிகச்சிறப்பாக விளையாடி வெறும் 28 பந்துகளில் தனது 6வது டி.என்.பி.எல் அரைசதத்தைப் பதிவு செய்ததோடு இந்த சீஸனில் தன் 2வது அரைசதத்தை இறுதிப்போட்டியில் அடித்தார். நல்ல ஸ்கோரை நோக்கி சென்று கொண்டிருந்த கோவை அணி முக்கிய தருணத்தில் ஜெ சுரேஷ் குமார்(57 ரன்கள் 33 பந்துகள்) இழக்க அடுத்த வந்த அவர்களின் கேப்டன் ஷாரூக் கான் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழக்க நெல்லை ராயல் கிங்ஸ் பக்கம் ஆட்டம் திரும்பியது.
ஆனால், இறுதிப்போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்த அதைப் பயன்படுத்திக் கொண்ட லைகா கோவை கிங்ஸ் மளமளவென ரன்களை உயர்த்தியது.மேலும், 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த யூ முகிலேஷ் மற்றும் அத்திக் உர் ரஹ்மான் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 74 ரன்கள் குவித்தனர். கோவையின் ரன் வேகத்தை மிக அதிகமாக உயர்த்தக் காரணமான அத்திக் உர் ரஹ்மான் டி.என்.பி.எல்லில் வெறும் 20 பந்துகளில் தன் முதல் அரைசதத்தை அடித்ததோடு தமிழ்நாடு பிரீமியர் லீக் வரலாற்றின் இறுதிப்போட்டியில் அதிவேக அரைசதத்தையும் பதிவு செய்து சாதனைப் படைத்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் யூ முகிலேஷ் 40 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து இந்த சீஸனில் தன் முதல் அரைசதத்தை இறுதிப்போட்டியில் அடிக்க, இறுதியில் லைகா கோவை கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 205 ரன்கள் என்ற இமாலய இலக்கை இறுதிப்போட்டியில் குவித்தது.
நெல்லை ராயல் கிங்ஸ் தங்களின் முதல் டி.என்.பி.எல் பட்டத்தை கைப்பற்ற 206 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கவுள்ளது.
டாபிக்ஸ்