தமிழ் செய்திகள்  /  Sports  /  Kl Rahul Suffered Yet Another Failure With The Bat In India First Innings

KL Rahul: சொதப்புவது தான் முழு நேர வேலையா? இன்றும் கோட்டைவிட்ட கே.எல்.ராகுல்!

Karthikeyan S HT Tamil
Feb 18, 2023 11:55 AM IST

Ind vs Aus 2nd Test: கே.எல்.ராகுல் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவருக்கு இந்திய அணியில் இனியும் வாய்ப்பு தர வேண்டுமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 78.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்கள் எடுத்தது.

முதல் இன்னிங்ஸில் ஷமி 4 விக்கெட்டுகள், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.

ரோஹித் சர்மா 13 ரன்களும், கே.எல்.ராகுல் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 242 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது இந்திய அணி. ஆரம்பமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது போல் மாறியது இன்றைய தொடக்கம். ஆஸ்திரேலியாவின் நேத்தன் லயன் பந்துவீச்சில் இந்தியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

கேப்டன் ரோஹித் ஷர்மா 32 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினார்.  இருப்பினும் இந்த முறை ரன் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 1 சிக்ஸருடன் மீண்டும் ஏமாற்றத்தையே கொடுத்தார்.  41 பந்துகளை சந்தித்த கே.எல்.ராகுல் 17 ரன்களுக்கு பெவுலியன் திரும்பினார். இதன் மூலம் இந்தியாவுக்கு அதிர்ச்சி துவக்கமாக அமைந்தது. நேத்தன் லயன் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவர் அவுட்டாகினார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலும் சொதப்பிய கே.எல்.ராகுல், 71 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகினார். இரண்டாவது டெஸ்டில் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் சொதப்பியது கே.எல்.ராகுல் மீதான விமர்சனத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

கே.எல்.ராகுல் கடந்த 11 டெஸ்ட் இன்னிங்சில் ஒரே ஒரு முறை தான் அரை சதம் அடித்திருக்கிறார். அதில், 23, 50 ,8 ,12, 10, 22 ,23, 10, 2, 20 , 17 என மிகவும் மோசமான ஸ்கோர்களையே அடித்திருக்கிறார். 565 பந்துகளை கடந்த 11 இன்னிங்ஸில் எதிர்கொண்ட ராகுல் வெறும் 197 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இப்படி தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல்.ராகுலுக்கு இனியும் வாய்ப்பு தர வேண்டுமா? என ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

கே.எல்.ராகுலை அதிரடியாக நீக்கி விட்டு சுப்மன் கில் அல்லது சர்பிராஸ்கான் ஆகிய திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

WhatsApp channel

டாபிக்ஸ்