KL Rahul: மாணவருக்கு உதவிக்கரம்..! கருணை உள்ளத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல்
அபார பேட்டிங் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரராக இருந்து வரும் கேஎல் ராகுல், மாணவன் ஒருவரின் பள்ளி படிப்புக்கு பண உதவி செய்து கிரிக்கெட் களத்துக்கு வெளியே சிறந்த மனிதர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் மங்களூருவை சேர்ந்த கேஎல் ராகுல், கிரிக்கெட்டை தொடர்ந்து களத்துக்கு வெளியே பல்வேறு இளைஞர்களுக்கு ஆதரவு கரங்களை தருவதில் முதல் ஆளாக இருந்து வருகிறார். மகாலிங்கபுரா என்ற பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் மேல்படிப்புக்காக பண உதவி செய்து அவரது கனவை நினைவாக்கியுள்ளார் கேஎல் ராகுல்.
கேஎல் ராகுலிடம் உதவி பெற்ற அம்ருத் மாவின்கட்டி என்ற அந்த இளைஞர், ஹப்பாளி நகரில் உள்ள கேஎல்ஈ கல்லூரியில் பிகாம் படிப்பை தொடர்கிறார். இதற்கான முழு செலவையும் கேஎல் ராகுல் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பள்ளிப்படிப்பில் 95 சதவீதம் மார்க் எடுத்த அம்ருத்துக்கு முதல் ஆண்டுக்கான அட்மிஷன் கட்டணம், உணவு, புத்தகம் என அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டுள்ளார். படிப்பில் சிறந்து விளங்கினாலும், அவரது குடும்பத்தினரின் பொருளாதார பின்னடைவு காரணமாக பலரிடம் உதவி கோரியுள்ளார்.
ஹப்பாளி பகுதியில் வசித்து வரும் சமூக ஆர்வலரான மஞ்சுநாத் ஹெப்சூர் என்பவரின் முயற்சியின் மூலம், கேஎல் ராகுலை அணுகி மாணவர் அம்ருத்தின் நிலைமை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதைக் கேட்டு உடனடியாக மாணவருக்கு வேண்டிய உதவியை செய்வதாக உறுதியளித்த கேஎல் ராகுல், அவருக்கு தேவையான பொருளாதார உதவி வழங்கியுள்ளார். அம்ருத் ஒளிமையமான எதிர்காலத்தை பெறுவதற்கான முதல் கல்லை எடுத்து வைத்துள்ளார்.
கேஎல் ராகுல் இதுபோன்று உதவி செய்வது முதல் முறையல்ல. கொரோனா அச்சுறுத்தல் காலத்திலும் தேவைப்படுவோருக்கு பல்வேறு உதவிகளை அவர் செய்துள்ளார்.
கிரிக்கெட்டில் எப்படி தனது அபார ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளாரோ, கிரிக்கெட் களத்துக்கு வெளியேயும் நல்ல மனிதர் என்ற பெயரை பெற்றுள்ளார்.
ஐபிஎல் தொடரின்போது தொடையில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்ட கேஎல் ராகுல், அதற்கான அறுவை சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வருகிறார். தற்போது காயம் குணமடையும் நிலையில் உள்ளார்.
டாபிக்ஸ்