HT Sports Special: இந்திய ரசிகர்களை Upset ஆக்கி ஹீரோவான இரண்டு வீரர்கள்! கத்துகுட்டிகளிடம் சரணடைந்த தருணம்
இந்திய ரசிகர்கள் மனதை ரணமாக்கிய தோல்விகளுக்கு காரணமாக இருந்த இரு வீரர்கள் இன்று தங்களது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். 1990 காலகட்டத்தில் கத்துக்குட்டிகளாக இருந்த கென்யா அணியை சேர்ந்த மாரிஸ் ஒடும்பே, வங்கதேசத்தை சேர்ந்த அப்துர் ரசாக் இந்தியாவை அப்செட் ஆக்கிய அந்த நிகழ்வின் பிளாஷ்பேக்கை பார்க்கலாம்.
1990களில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர்கள் மிகவும் பிரபலமாக இருந்தன. மூன்று நாடுகள் மோதிக் கொள்ளும் அந்த போட்டிகள் சுவாரஸ்யமும், த்ரில்லும் நிறைந்த போட்டிகளாகவே அமைந்திருக்கும்.
அந்த வகையில், 1998 கோடையில், தற்போதையை ஐபிஎல் போட்டிகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் மாதமான மே பிற்பகுதியில் இந்தியா, வங்கதேசம், கென்யா அணிகள் மோதிய Coco Cola Traingular தொடர் நடைபெற்றது. இதில் அனைத்து போட்டிகளும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 1 மணி வரை நடைபெறும் விதமாக அட்டவணை உருவாக்கப்பட்டிருந்தன. பகல் இரவு ஆட்டம் என்பது அந்த மாலையில் தொடங்கி நள்ளிரவு வரை தொடரும் விதமாக இருந்த இந்த போட்டிகள் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தந்ததன.
இந்த தொடரில் மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியர் மைதானத்தில் நடைபெற்ற 6வது லீக் போட்டியில் இந்தியாவுக்கு ஷாக் கொடுத்தது கத்துகுட்டி அணியான கென்யா. அதற்கு தனது ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் காரணமாக இருந்த கென்யா வீரர், பின்னாளில் அந்த அணி கேப்டனாகவும் சில காலம் பொறுப்பு வகித்த மாரிஸ் ஒடும்பே.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கென்யா 5 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. அதிரடியாக பேட்டிங் செய்த ஒடும்பே 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என விளாசி 83 ரன்கள் எடுத்தார். இவருடன் ஓபனிங் பேட்ஸ்மேன் ரவி ஷா 70, மிடில் ஆர்டர் பேட் செய்த ஹித்தேஷ் மோடி 51 ரன்கள் எடுக்க கென்யா இந்த ஸ்கோரை எட்டியது. இந்திய பவுலர்கள் அனைவரின் ஓவரிலும் கென்யா பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கினார்கள். இந்திய பவுலர்கள் 7 பேர் பவுலிங் செய்தும் ரன் வேட்டையை அவர்கள் நிறுத்தவில்லை. குறிப்பாக அணியன் ப்யூர் பேட்ஸ்மேனாக இருந்த ராகுல் டிராவிட்டே 6 ஓவர்கள் வீசியபோதிலும், 29 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
இதைத்தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி பேட்ஸ்மேன்களை பவுலிங்கிலும் மிரிட்டினார்கள் கென்யா பவுலர்கள். இந்திய அணியின் டாப் ஆர்டரான சித்து 27, டென்டுல்கர் 18, அசாரூதின்- 9 ஆகியோரை பெரிய ஸ்கோர் எடுக்க விடாமல் கிளப்பினர்.
இவர்களை தொடர்ந்து வந்த டிராவிட் நம்பிக்கையூட்டும் விதமாக பேட் செய்தாலும், அவரும் 33 ரன்களில் அவுட்டானார். பேட்டிங்கில் கலக்கிய ஒடும்பே தனது ஸ்பின் பவுலிங்கில் இந்திய அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்களை திணறடித்தார். 14 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் இந்தியா 196 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி 69 ரன்களில் தோல்வியை தழுவியது.
இந்தியாவில் நடைபெறும் ஒரு போட்டியை இரவு தூக்கத்தை கலைத்து பார்க்குமாறு அட்டவணை உருவாக்கியிருந்தனர். அந்த சூழ்நிலையில் தூக்கத்தை தியாகம் செய்து கோடிக்கணக்கானோர் பார்த்த இந்த போட்டியில் கத்துக்குட்டி அணியிடம் இந்தியா பெற்ற தோல்வி ரசிகர்களை உடைந்து போக செய்தது.
இதன்பின்னர் சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் க்ளைமாக்ஸில் திருப்பி கொடுப்பது போல், இறுதிப்போட்டியில் இதே 196 ரன்களுக்கு கென்யாவை ஆல்அவுட் செய்து இந்தியா வெற்றி பெற்றது மற்றொரு சுவாரஸ்யமான கதை.
இருப்பினும் இந்தியா அணி பெற்ற தோல்விகளில் மிகப் பெரிய UPSETஆக குவாலியர் போட்டி அமைந்தது. இந்த மைதானத்தில் தான் சச்சின் டென்டுல்கர் ஒரு நாள் கிரிக்கெட்டின் முதல் இரட்டை சதத்தை அடித்து சாதித்தார். ஆனால் இந்த மைதானத்தில் நடந்த போட்டிகளில் இந்தியாவுக்கு இப்படியொரு சோகமான பிளாஷ்பேக்கும் உள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு, இந்தியா தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்த கென்யா வீரர் மாரிஸ் ஒடும்பே இன்று 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இதேபோன்று மற்றொரு UPSET சம்பவம் இந்த தொடரில் விளையாடிய வங்கதேசம் அணி, சரியாக 9 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு எதிராக நிகழ்த்தியது. 2007 உலகக் கோப்பை தொடரில் நடந்த இந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது.
வலுவான அணியாக இருந்த இந்தியாவுக்கு வெற்றி நிச்சியம் என நம்பியிருந்த ரசிகர்களுக்கு கத்துக்குட்டியான வங்கதேசம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. முதலில் பேட் செய்த இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஷேவாக் 2, உத்தப்பா 9, டென்டுல்கர் 7, டிராவிட் 14 ஆகியோரின் விக்கெட்டுகளை விரைவாக தூக்கினர்.
இருந்தபோதிலும் கங்குலி - யுவராஜ் சிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நம்பிக்கை அளித்தனர். அவர்கள் இருவரும் அடுத்தடுத்து அவுட்டாக, அவ்வளவுதான் இந்தியாவின் பேட்டிங் வரிசை அடுத்து முற்றிலுமாக சரிந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி 0 ரன்னில் நடையை கட்ட, பின்னர் பேட் செய்த ஹர்பஜன், அகர்கர் ஆகியோரும் டக்அவுட்டாகி வெளியேறினர். அணியின் ஸ்கோர் 9 விக்கெட்டுக்கு 159 என இருந்தது.
இதனால் இந்தியா அணி 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நேரத்தில் ஜாகீர் கான், முனாஃப் படேல் ஆகியோரின் சிறிய கேமியோ இன்னிங்ஸால் 191 ரன்கள் எடுத்தது.
மிகவும் எளிதான இந்த இலக்கை இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்த முடிந்த அளவு முயற்சித்த போதிலும் வங்கதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது வங்கேதேச பவுலர்களின் துல்லிய பந்து வீச்சு. குறிப்பாக ஸ்பின்னர்களான அப்துர் ரசாக் - முகமது ரபிக் கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களை எந்த சூழ்நிலையிலும் பெரிய ஷாட்களை ஆடி ரன் குவிக்கவிடாமல் கட்டுப்படுத்தினர். இந்திய பேட்ஸ்மேன்களை அசத்தலான ஸ்பின் அட்டாக் மூலம் திணறடித்த அப்துர் ரசாக் வங்கதேசத்தின் ஸ்டிரைக் பவுலராக இந்த தொடர் முழுவதும் ஜொலித்தார். மொத்தம் 9 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச பவுலர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவராக திகழ்ந்தார்.
ஒரு நாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வங்கதேச வீரர் என்ற பெருமைக்குரிய அப்துர் ரசாக் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மேற்கூறிய இந்த இரண்டு வீரர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி எளிதில் மறக்க முடியாத மிகப் பெரிய தோல்வியை பெற காரணமாக இருந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்