தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Isl 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 04, 2024 11:55 PM IST

இறுதிப்போட்டியில் இரண்டு முறை மோகன் பகான் அணியை எதிர்கொண்டு நிலையில், இரு தடவையும் மும்பை சிட்டி அணி வென்று சாம்பியன் ஆகியுள்ளது. ஐஎஸ்எல் தொடரில் முதல் சீசனில் இருந்து விளையாடி வரும் அணியாக இருக்கும் மும்பை சிட்டி இரண்டாவது கோப்பையை வென்றுள்ளது.

ஐஎஸ்எல் கோப்பையுடன் மும்பை சிட்டி அணி
ஐஎஸ்எல் கோப்பையுடன் மும்பை சிட்டி அணி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இது மும்பை சிட்டி அணி வெல்லும் இரண்டாவது ஐஎஸ்எல் கோப்பையாக உள்ளது.  இரண்டு முறையும் மோகன் பகான் அணியை வீழ்த்தியே பட்டம் வென்றுள்ளது. 

ஐபிஎல் 2024 சீசனில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் ப்ளேஆஃப் வாய்ப்பை இழந்த முதல் அணியாக மாறியது.

ஆனால் அதற்கு நேர் மாறாகவும், பழிதீர்க்கும் விதமாகவும் கொல்கத்தாவை மையமாக கொண்ட மோகன் பகான் அணியை வீழ்த்தி மும்பை சிட்டி சாம்பியன் ஆகியுள்ளது.

மும்பை சிட்டி சாம்பியன்ஸ்

இந்த போட்டியில் வென்றால் மோகன் பகான் 5வது முறையும், மும்பை சிட்டி இரண்டாவது முறையும் ஐஎஸ்எல் கோப்பை வெல்லும் என்கிற நிலையில் களமிறங்கின.

இறுதிப்போட்டி என்பதால் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் தங்களது முழு பலத்தையும் வெளிப்படுத்தும் விதமாக விளையாடியது. கோல் முயற்சிகள் அனைத்து வீணாகி போன நிலையில், முதல் பாதி முடிவதற்குள் ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் மோகன் பகான் முதல் கோல் அடித்து கணக்கை தொடங்கியது.

அந்த அணியின் ஜேசன் கம்மிங்ஸ் இந்த கோலை அடித்தார். ஆனால் இதுவே அவர்களின் கடைசி கோல் ஆகவும் மாறிபோனது.

இரண்டாம் பாதியில் மும்பை வீரர்கள் கொஞ்சம் ஆக்ரோஷத்துடன் விளையாடியதன் விளைவாக 53வது நிமிடத்தில் முதல் கோல் கிடைத்தது. இந்த கோலை ஜார்ஜ் பெரேரா அடித்தார்.

கோல்கள் சமநிலை அடைய இரு அணிகளும் இரண்டாவது கோலுக்கு கடுமையாக முயற்சித்தன. இந்த முயற்சியில் மும்பை சிட்டி வெற்றியை பெற்றது. ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் பிபின் சிங் மூலம் இரண்டாவது கோல் கிடைத்தது. இதனால் முன்னிலை பெற்றது மும்பை சிட்டி

எஞ்சிய நிமிடங்களை கடத்திவிட்டால் வெற்றி என்கிற நிலைமை மும்பை சிட்டிக்கு இருந்த நிலையில், மோகன் பகான் இரண்டாவது கோல் பெறுவதற்கான போராட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் 90+7 கூடுதல் ஏழு நிமிடத்தில் மும்பை சிட்டிக்கு மூன்றாவது கோலை ஜேக்கப் வேஜ்டஸ் அடித்தார்.

இதனால் கூடுதலாக இரண்டு கோல்களை பெற்று சூப்பரான வெற்றியை மும்பை சிட்டி பெற்றது.

ஐஎஸ்எல் விருதுகள்

ஐஎஸ்எல் 2024 சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை சிட்டி அணி கோப்பையுடன் ரூ. 6 கோடி பரிசுத்தொகை வென்றது. ரன்னர் அப் மோகன் பகான் அணி ரூ. 3 கோடி பரிசுத்தொகை வென்றது.

கோல்டன் குளோவ் விருதை மும்பை சிட்டியின் கோல் கீப்பர் புர்பா லாசென்பா வென்றார். அவருக்கு ரூ. 2.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

கோல்டன் பூட் விருது கேரள பிளாஸ்டர் வீர்ர டிமிட்ரியோஸ் டயமண்டகோஸ் வென்றார். இந்த சீசனில் மட்டும் அவர் 13 கோல்கள் அடித்துள்ளார்.

இந்த சீசனின் தொடர் நாயகன் விருதை மோகன் பகான் அணிக்காக விளையாடிய டிமிட்ரி பெட்ராடோஸ் வென்றார். வளர்ந்து வரும் வீரருக்கான விருதை மும்பை சிட்டி வீரர் விக்ரம் பிரதாப் சிங் வென்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்