TNPL Qualifier 1: சீட்டுகட்டு போல் சரிந்த திண்டுக்கல் பேட்ஸ்மேன்கள் - தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலில் கோவை
நடப்பு சாம்பியனாக இருந்து வரும் லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் அணிக்கு எதிராக பேட்டிங், பவுலிங் என சிறப்பான ஆட்டம் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
டிஎன்பிஎல் 2023 தொடரின் குவாலிபயர் போட்டி லைக்கா கோவை கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கு இடையே சேலத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கோவை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.
கோவை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சாய் சுதர்சன், எமெர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்தியா ஏ அணியில் தேர்வாகியுள்ளார். அதனால் அவர் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை.
இதையடுத்து கோவை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சச்சின் அதிரடியாக பேட் செய்து ரன் வேட்டையில் ஈடுபட்டார். இவருடன் இணைந்து முகிலேஷும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியாக பேட் செய்தார்.
அரைசதம் அடித்த சச்சின் 70 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதேபோல் முகிலேஷ் 44 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன்குவிப்பில் ஈடுபடாத நிலையில், கடைசி நேரத்தில் பேட் செய்ய வந்த அதீக் உர் ரஹ்மான் சிறிய கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தி 4 பவுண்டரிகளை விளாசி 19 ரன்கள் எடுத்தார்.
திண்டுக்கல் பவுலர்களில் சுபோத் பாட்டி 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து 194 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய திண்டுக்கல் பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்கள் சேர்த்தபோதிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தனர். 10 ஓவருக்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்து திண்டுக்கல் அணி தடுமாறி வந்தது.
இதையடுத்து இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்ட சரத் குமார், தொடக்கம் முதலே அதிரடியாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டார். 8 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 26 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்.
திண்டுக்கல் அணியில் சரத் குமார் மட்டும் அதிரடியாக பேட் செய்த நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக அவுட்டாகினர். இதனால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு திண்டுக்கல் அணி 163 ரன்கள் எடுத்தது.
கோவை அணி 30 ரன்களில் வெற்றி பெற்றதுடன், தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. கோவை பவுலர்களில் முகமது 3, கெளதம் தாமரை கண்ணன் மற்றும் வள்ளியப்பந் யுதீஷ்வரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தற்போது நடப்பு சாம்பியனாக இருந்து வரும் கோவை இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது.