HBD Sourav Ganguly: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் தாதா! இந்த நூற்றாண்டின் புதிய இந்திய அணியை உருவாக்கிய முதல் கேப்டன்
வங்காள மொழியில் தாதா என்ற அண்ணா என்று பொருள். இந்திய கிரிகெட்டில் தாதா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் இந்திய கிரிக்கெட் அணியை புதிதாக உருமாற்றியவரும், முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலி.
மேற்கு வங்கத்தை சேர்ந்த செளரவ் கங்குலி 1992 முதல் 2008 வரை 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த இடைப்பட்ட காலங்களில் இவர் நிகழ்த்திய சாதனைகள், வெளிப்படுத்திய தாக்கம் உலகையை வியந்து பார்க்கும் விதமாக அமைந்தது.
1992இல் முதலில் ஒரு நாள் போட்டியில் அறிமுகமான கங்குலி, கால் தரையில் படாதவாறு ஓடிக்கொண்டிருந்த இந்திய அணி பீல்டர்களுக்கு தரையில் புறண்டும், பாய்ந்தவாறு பந்தை பிடிக்கும் வித்தையை கற்றுக்கொடுத்த முன்னோடியாக திகழ்ந்தார். ஆரம் காலகட்டத்தில் கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளில் பேட்டிங்கில் பெரிதாக தாக்கத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், அற்புத பீல்டர் என்ற கவனத்தை ஈர்த்தார்.
இதன் பின்னர்1996இல் டெஸ்ட் ஆடும் வாய்ப்பு. முதல் போட்டியிலேயே கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸில் வைத்து சதமடித்து உலக கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். இதனால் அணியிலும் நிலையான இடத்தை தக்க வைத்துக்கொண்ட கங்குலி ஓபனிங் பேட்ஸ்மேனாக பல போட்டிகளில் ஜொலித்தார்.
ஆஃப் சைடில் இவர் அடிக்கும் பந்து சர்க்கிளை தாண்டிவிட்டால் நிச்சயம் பவுண்டரிதான் என்றும், ஸ்பின்னர்களை இறங்கி வந்து அட்டாக் செய்து சிக்ஸருக்கு பறக்க விடுவதும் என பேட்டிங்கில் அச்சுறுத்தினார். 1999 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக, கபில்தேவ்க்கு அடுத்தபடியா 150 ப்ளஸ் ஸ்கோர் அடித்து இந்திய வீரராக, அதே போட்டியில் கபில் சாதனையை முறியடித்து அதிக ஸ்கோர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் புரிந்தார்.
இந்த உலகக் கோப்பை முடிந்த பின்னர் கங்குலி வெளிப்படுத்திய தாக்கம் என்பது இந்திய அணிக்கு வேறு மாதிரியாக இருந்தது. 2000ஆவது ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட இவர், மற்றவர்களை போல் கேப்டன்சி செய்தோம், விளையாடினோம் என்றில்லாமல் அணியை புதிததாக கட்டமைப்பதில் கவனம் செலுத்தினார்.
சூதாட்ட சர்ச்சையால் துவண்டு போயிருந்த இந்திய அணிக்கு புத்துயிர் கொடுப்பதற்கு அடிப்படை உரமிட்டார். 21ஆம் நூற்றாண்டில் சாதனை அணியாக வலம் வரும் இந்திய அணியிக்கான விதை போட்டவர் கங்குலி என்றால் அது மிகையாகாது.
விராட் கோலியின் அணுகுமுறையின் தாக்கம் தான் இந்திய அணி ஆக்ரோஷ செயல்பாட்டுக்கு முக்கிய காரணம் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் அவற்ருக்கெல்லாம் காட் ஃபாதர் என்றால் கங்குலி தான். எந்த அணியை கண்டும் அஞ்சாமல் இந்தியா அணியை கண்டு மற்ற அணிகள் பயப்படும் அளவுக்கு இளைய திறமைகளை வைத்து அணியை புதிதாக உருமாற்றினார். இதனை விளைவாக 20 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பை இறுதி வரை சென்றது.
இவற்றுக்கெல்லாம் முன்னோட்டமாக நாட்வெஸ்ட் தொடர் வெற்றி, சாம்பியன்ஸ் டிராபி வெற்றி போன்றவற்றையும் செய்திருப்பார் கங்குலி. அந்நிய மண்ணில் வெற்றி பெறும் பழக்கத்தை இந்திய அணிக்கு உருவாக்கியதில் முக்கிய பங்கு கங்குலிக்கு உண்டு. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை ட்ரா செய்த கேப்டனாக திகழ்ந்தார்.
களத்தில் இருந்தவாறு இந்திய கிரிக்கெட் அணியை உலகமே வியந்து பார்க்க வைத்த கங்குலி, ஓய்வுக்கு பின் களத்துக்கு வெளியேயும் பிசிசிஐ தலைவராக இந்திய அணியை சிறந்த அணியாக உருவாக்குவதற்கான அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்