Ashes 2023: கேப்டன்களின் தரமான சம்பவம்! அதிரடி காட்டிய ஸ்டோக்ஸ், வேகத்தால் மிரட்டிய கம்மின்ஸ் - ஆஸி., முன்னிலை
இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் தவிர மற்றவர்கள் பெரிய ஸ்கோர் எடுக்க தவறியதோடு, கம்மின்ஸ் வேகத்துக்கு இரையாகினர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஆல்அவுட்டான நிலையில், ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.
ஆஷஸ் 2023 தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் முதல் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னரே ஆஸ்திரேலியா அணி 263 ரன்களில் ஆல்அவுட்டானது.
ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் மிட்செல் மார்ஷ் மட்டும் அதிரடியாக பேட் செய்து சதமடித்தார். ஆஸ்திரேலியா இன்னிங்ஸில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 118 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் டெரராக பந்து வீசியதோடு, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு அடுத்தபடியாக கிறிஸ் வோக்ஸ் 3, ஸ்டூவர்ட் போர்டு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்திருந்தது. ஓபனிங் பேட்ஸ்மேன் க்ராவ்லி 33, பென் டக்கெட் 2, ஹாரி ப்ரூக் 3 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஜோ ரூட் 19, பேர்ஸ்டோ 1 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தனர். இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிலைத்து நின்று பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டார். மற்ற பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க, இங்கிலாந்து அணி 237 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதையடுத்து ஆஸ்திரேலியா 26 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு அடுத்தபடியாக மிட்செல் ஸ்டார்க் 2, மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்பின்னர் டோட் முர்பி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என இரு அணிகளிலும் கேப்டன்கள் சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்தினர். தற்போது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்